
சென்னை,
கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த காலமாக மீன்வளத் துறை ஆய்வு செய்து கண்டறிந்து அறிவித்துள்ளது. எனவே, இந்த காலக்கட்டத்தில், ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகளுக்கு கடந்த 2001-ம் ஆண்டு முதல் தடைவிதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியான வங்கக்கடலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 14-ந் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவது இல்லை. ஆரம்பத்தில் 45 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த சில ஆண்டுகளாக 61 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி கிராமம் வரை 1076 மைல் தொலைவுள்ள கிழக்கு கடலோர பகுதியில் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். இதனால், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 12 மாவட்டங்களில் உள்ள 6,700 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரையில் ஓய்வெடுக்கும்.
அதே நேரத்தில், கரையில் இருந்து 3 மைல் தொலைவுக்கு பைபர் படகுகள், கட்டுமரங்களில் சென்று மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறிய படகுகளில் குறைவான தூரத்தில் சென்று மீன்பிடிக்கும்போது, சிறிய அளவிலான மீன்களே கிடைக்கும்.
அதனால், பெரிய சைஸ் மீன் பிரியர்களின் தேவைகளுக்கு மேற்கு கடல் பகுதியான அரபிக்கடலில் பிடிக்கப்படும் மீன்கள் ஐஸ் கட்டி துண்டுகளால் பதப்படுத்தி கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படும். ஆனால், விலை அதிகமாக இருக்கும்.
இந்த மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் வாழ்வாதாரம் இழப்பதால், தமிழக அரசு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. மீன்பிடி தடைக்காலத்தில் முன்பு வழங்கப்பட்ட ரூ.5 ஆயிரம் உதவித்தொகை தற்போது ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காலக்கட்டத்தில் மீனவர்கள், விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் உள்ள பழுதுகளை சரிசெய்யும் பணியில் வழக்கமாக ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.