புதுடெல்லி: வக்பு நிலம் குறித்த தன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் அமைச்சர் அனுராக் தாக்கூர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தி உள்ளார். வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப் பட்ட வக்பு வாரிய ஊழல் குறித்த அறிக்கையில் காங்கிரஸ் தலைவர் கார்கே குடும்பத்தினர் பெயர் பட்டியல் இருப்பதாக” குற்றம்சாட்டினார். இது எதிர்க்கட்சிகளிடையே பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மாநிலங்களவை நேற்று காலை அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் உரையுடன் தொடங்கியது. அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “அனுராக் தாக்கூர் நேற்று என்மீது முற்றிலும் பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அவரது குற்றச்சாட்டுகள் ஊடகம், சமூக வலைதளங்களில் வௌியாகி என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டது.
நான் ஒரு தொழிலாளியின் மகன். காங்கிரசின் தொகுதி குழு தலைவர் பதவியில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு உயர நான் கடுமையாக உழைத்தேன். என் 60 ஆண்டுகால அரசியல் வாழ்வில் யாரும் என்னை நோக்கி இப்படியொரு குற்றம்சாட்டியதில்லை. என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். என் பொதுவாழ்க்கையில் உயர்ந்த மதிப்புகளை நான் எப்போதும் நிலைநிறுத்தி உள்ளேன்.
வக்பு வாரிய நிலத்தின் ஒரு அங்குலத்தை கூட நானோ, என் குடும்பத்தினரோ அபகரிக்கவில்லை. தாக்கூர் என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபித்தால் நான் ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாவிட்டால் தாக்கூர் பதவியில் தொடர தகுதி இல்லை. அவர் ராஜினாமா செய்ய வேண்டும்” என காட்டமாக வலியுறுத்தினார்.
The post வக்பு நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டை நிரூபிக்கா விட்டால் அனுராக் தாக்கூர் பதவி விலக வேண்டும்: கார்கே காட்டம் appeared first on Dinakaran.