புதுடெல்லி: “வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வக்ஃபு மசோதா நிறைவேறியது ஒரு திருப்புமுனை தருணத்தை குறிக்கிறது.
சமூக-பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான மசோதா இது. மீண்டும் விரிவான விவாதம் மற்றும் உரையாடலின் முக்கியத்துவம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக, வக்ஃப் அமைப்பில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் இல்லாமையாக இருந்தது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள், ஏழை முஸ்லிம்கள், பாஸ்மண்டா முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தது. தற்போது நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்; மக்களின் உரிமைகளை பாதுகாக்கும். ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்துக்கும் முன்னுரிமை அளிப்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. இதுதான் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான வழி.” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் : பிரதமர் நரேந்திர மோடி உரை appeared first on Dinakaran.