ஊட்டி: வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக இன்று வழக்கு தாக்கல் செய்ய உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசின் திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்கள் கள ஆய்வுக்காக விமானம் மூலம் நேற்று முன்தினம் கோவைக்கு வந்தார்.
அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நீலகிரி புறப்பட்டு சென்ற முதல்வர், கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகே நிலச்சரிவை தடுக்கும் வகையில் மண் ஆணி (கேபியான் சுவர்) அமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு, ஊட்டி சென்ற அவர், அங்குள்ள ஜெம்பார்க் ஓட்டலில் நீலகிரி மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகளுடன் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், தமிழகம் மாளிகையில் தங்கிய முதல்வர், நேற்று காலை ஊட்டி எச்பிஎப் பகுதியில் புதிதாக 700 படுக்கை வசதிகளுடன் ரூ.143.69 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்வர் திறந்து வைத்தார்.
இங்கு ஆண்கள், பெண்களுக்கு தலா 20 படுக்கைகள், குழந்தைகள் மற்றும் மகப்பேறுக்கு என 10 படுக்கைகள் என மொத்தம் 50 படுக்கைகள் கொண்ட பழங்குடியினர் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையை திறந்து வைக்க வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், மருத்துவமனை வளாக வரைபடம், அறுவை சிகிச்சை அரங்கம், அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவமனையில் உள்ள அதிநவீன மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பணியாளர்களுக்காக ரூ.200.06 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும் ஊட்டியில் ரூ.1.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் உள்பட மொத்தம் ரூ.370.42 கோடி மதிப்பில் மருத்துவத் துறை சார்ந்த கட்டிடங்களையும் திறந்து வைத்தார். தொடர்ந்து, ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க சென்றார்.
அங்கு நடந்த விழாவில் ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 1,703 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். பின்னர், 15,634 பயனாளிகளுக்கு ரூ.102.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சியில் இந்த மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம். உங்களுக்கு நன்மை செய்ய முதல்ஆளாக இருக்கிறேன்.
துன்பம் வந்தாலும், ஓடோடி வந்து, துயர் துடைக்கும் முதல் ஆள் நான்தான். கடந்த 2009ம் ஆண்டு வெள்ளம் வந்தபோது, ஓடோடி வந்தேன். அன்று துணை முதல்வராக இருந்தேன். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் மேற்கொண்டேன்.கடந்த 2019ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டபோதும் ஓடோடி வந்தேன். இரண்டு நாட்கள் இங்கேயே முகாமிட்டு, நீலகிரி மக்களுக்கு துணையாக இருந்தேன். வீடுகளை இழந்தவர்களை சந்தித்து, உதவி செய்தோம்.
அன்றைய ஆட்சியாளர்கள், தூக்கத்தில் இருந்தார்கள். அவர்களை தட்டி எழுப்பி, நீலகிரிக்கு வரவழைத்ததும் திமுகதான். நாம் கேள்வி எழுப்பிய பிறகுதான் சில மணி நேரம் ஹெலிகாப்டரில் பறந்து வந்து பார்த்துவிட்டு சென்றார், அன்றைய முதல்வர். இதுதான் மக்களை ஏமாற்றும் அவர்களுக்கும், மக்களோடு துணை நிற்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். இன்று, இந்திய அளவில் ஒப்பிடுகையில், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. வறுமையை ஒழித்து, பட்டினிசாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.
ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்படி, 9.96 விழுக்காடு நம் மாநிலம் வளர்ச்சி அடைந்து, முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் அதிக வளர்ச்சி அடைந்த மாநிலம் தமிழ்நாடுதான். ஏன், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெஸ்ட் மாநிலமாக வளர்ச்சி அடைந்துள்ளது. எல்லா மாநிலங்களிலும் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிற நேரத்தில், தமிழ்நாடு மட்டும் டாப் கிரியரில் போகிறது. இந்த தனித்துவம், தலைமைத்துவம்தான் நமது திராவிட மாடல் அரசு. இதை ஆங்கில நாளிதழ் ஒன்று சுட்டிக்காட்டி, பாராட்டி உள்ளது.
தமிழ்நாடு மட்டும் வளர்ச்சி அடைந்தால் போதாது, இந்தியா முழுவதும் இந்த வளர்ச்சி இருக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகிறோம். இந்தியாவை காப்பாற்றும் வகையில் நமது எம்.பி.க்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய சதி செய்கிறார்கள். அதை தடுக்க, முதல் ஆளாக குரல் கொடுத்தது நாம்தான். இந்தி திணிப்பு, நிதி ஒதுக்கீடு பாரபட்சம், சிறப்பு திட்டம் புறக்கணிப்பு என தமிழ்நாட்டின் குரல் ஒடுக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நமது எம்.பி.க்களின் பேச்சு நசுக்கப்படுகிறது. நமது வலிமையை குறைக்க பாஜ அரசு துடியாய் துடிக்கிறது. ஆனாலும், நாடாளுமன்றத்தல் நமது உறுப்பினர்களின் பேச்சு அனலாய் பறக்கிறது. இது, சமூக வலைதளங்கில் ஒலிக்கிறது. வக்பு வாரிய சட்டத்திருத்தம் கடும் எதிர்ப்பை மீறி நிறைவேற்றி உள்ளார்கள். இதை நாம் கடுமையாக எதிர்த்தோம். நமது எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும், எதையும் காதில் வாங்காமல் இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி உள்ளார்கள். இதை எதிர்த்து நமது எம்.பி. ஆ.ராசா அரை மணி நேரம் அனல் பறக்க பேசினார். திருச்சி சிவா எம்.பி. 20 நிமிடம் முழங்கினார்.
ஆனால், அதிமுக எம்.பி. தம்பித்துரை ஒரு நிமிடம் மட்டுமே பேசினார். அதிலும், எதிர்ப்பா? ஆதரவா? என சொல்லவில்லை. வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில், ஆ.ராசா எம்.பி. பெயரில் உச்சநீதிமன்றத்தில் நாளை (இன்று) வழக்கு தொடரப்படும். சங்ககாலம், குடியாட்சி காலத்தில் இருந்து கோலோட்சி வரும் எங்களை எத்தகைய அரசியல் சூழ்ச்சியாலும் வீழ்த்திடவும் முடியாது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வீழ்த்தவும் விட மாட்டேன். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
The post வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக இன்று வழக்கு தாக்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.