சென்னை: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மாணவர்களின் உயர்கல்வியில் இனி எந்த தடைகளும் இருக்காது. துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டால் பல்கலைக்கழகங்களின் பிரச்னைகள் சரியாகி விடும் என கல்வியாணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மசோதாக்களை நிறுத்தி வைத்த தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம் என கூறி, நிறுத்தப்பட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இத் தீர்ப்பினால், தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தை நீதிமன்றம் சிறப்படைய செய்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, போர்க்கால அடிப்படையில் துணைவேந்தர்களை நியமனம் செய்ய வேண்டும் என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மிகப்பெரிய, மிகவும் வரவேற்கத்தக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. இது தமிழ்நாடு மாணவர்களுக்கு புத்துணர்வை அளிக்கும். பிற மாநிலங்களுக்கும் முன்னோடியாக நாம் செயல்பட்டுள்ளோம். நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் கல்வி வளர்ச்சி அடைய வேண்டும். இனிமேல் எந்த இடயூறுகளும் இல்லாமல் பல்கலைக்கழகங்கள் செயல்படும். துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நாம் உயர்கல்வியில் உயர்ந்து இருக்கிறோம் என கல்வியாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டை பொறுத்தவரை கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பள்ளிக் கல்விக்கான நிதியை அளிக்காமல் ஒன்றிய அரசு பிடிவாதம் பிடித்த போதிலும் மாணவர்களுக்கு எந்தக்குறையும் தமிழ்நாடு அரசு வைக்கவில்லை. அதுபோல உயர்கல்வியிலும் நாம் உயர்ந்து நிற்கிறோம். ஒன்றிய அரசு கூறியதைப்போல மும்மொழிக்கொள்கையை பின்பற்றாமல் இரு மொழிக்கொள்கை மூலமாகவே அந்த வளர்ச்சியை எட்டியுள்ளோம்.
மாற்று மொழி படிக்க விரும்புபவர்களையும் தடுக்கவில்லை. விருப்பம்போல் படிக்க விடுகிறோம். யார் மீது எந்த திணிப்பும் இல்லாமலே உயர்கல்வியில் உயர்ந்து இருக்கிறோம். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் இடையூறாக இருந்தார். தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் அவை சரி செய்யப்பட்டுள்ளது. இனி மாணவர்களின் உயர்கல்வியில் எந்த தடைகளும் இருக்காது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் விரைவில் நியமிக்கப்பட்டு பிரச்னைகள் சரியாகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.
The post உச்ச நீதிமன்ற தீர்ப்பால் உயர்கல்வியில் எந்த தடைகளும் இனி இருக்காது: கல்வியாளர்கள் கருத்து appeared first on Dinakaran.