டெல்லி: சிறுபான்மையினருக்கு எதிராகவும் அரசியல் சட்டத்துக்கு எதிராகவும் வக்ஃப் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். மக்களவையில் வக்ஃப் மசோதா மீதான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சிகள் தெரிவித்த எந்தக் கருத்துகளும் வக்ஃப் மசோதாவில் இடம்பெறவில்லை.
வக்ஃபு மசோதா குறித்து உண்மைகளை கூறவில்லை:
வக்ஃபு மசோதா குறித்து முழுமையான உண்மைகளை ஒன்றிய பாஜக அரசு கூறவில்லை. அரசியல் சட்டத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்தான் வக்ஃப் மசோதா. நாடாளுமன்ற குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் வக்ஃப் மசோதாவில் பிரதிபலிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கத்தின் போது சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் குழுவின் தலைவராக வல்லபாய் பட்டேல் இருந்தார்.
அரசியல் சட்டத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்:
அரசியல்நிர்ணய சபைக்கு வல்லபாய் பட்டேல் அளித்த அறிக்கையை மேற்கோள்காட்டி ஆ.ராசா பேசினார். எந்த அடிப்படையில் வக்ஃப் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதத்தைப் பற்றி மட்டுமே பாஜக அரசுக்கு கவலை
நேர்மையை பற்றி ஒருகாலத்திலும் பாஜக அரசு கவலைப்பட்டது இல்லை; மதத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது. உண்மையிலேயே நேர்மையாக இருந்தால், 2013ல் உள்ள நடைமுறைகளை மசோதாவில் சேர்ப்பீர்களா? என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
வக்ஃப் சொத்துகளை அபகரிக்க முயற்சி:
ஒட்டுமொத்த வக்ஃப் சொத்துகளை அபகரிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. வக்ஃப் சொத்து என அறிவிக்கப்பட்டதை அரசு சொத்து என அடையாளம் காண்பது தொடர்பான சட்டப்பிரிவே அபத்தமானது. வக்ஃப் வாரியத்துக்கும் அரசுக்கும் இடையிலான பிரச்சனையை தீர்க்க ஆட்சியருக்கு எப்படி அதிகாரம் கொடுக்கலாம்?. வக்ஃபு சொத்துகளை அபகரித்தால் கடுங்காவல் தண்டனை என்று இருந்ததை சாதாரண தண்டனை என மாற்றியுள்ளது புதிய சட்டப்பிரிவு. அரசியல் வேறு, மதம் வேறு; அரசியலில் இருந்து மதத்தைப் பிரித்துப் பாருங்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post வக்ஃப் மசோதா தாக்கல்.. சிறுபான்மையினருக்கு எதிராக வக்ஃப் மசோதா உள்ளது; அரசியல் சட்டத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்: திமுக எம்.பி. ஆ.ராசா காட்டம்!! appeared first on Dinakaran.