
சென்னை,
'மாநகரம்' படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தி நடித்த 'கைதி', விஜய்யின் 'மாஸ்டர்', கமல்ஹாசனின் 'விக்ரம்' படங்களை டைரக்டு செய்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கு மேல் வசூலானது. லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
தமிழ் சினிமாவில் யூனிவெர்ஸ் என்கிற கான்சப்டை கொண்டு வந்து, அதற்கென தனி ரசிகர்களை உருவாக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த யூனிவெர்சில் கடைசியாக லியோ படம் வெளிவந்த நிலையில், அடுத்ததாக கைதி 2 படம் உருவாகவுள்ளது. கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கைதி படமே இதற்கான ஆரம்பம். கூலி படத்தை முடித்த பின் 'கைதி 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை சந்தித்துள்ள நடிகர் கார்த்தி, லோகேஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு 'டில்லி ரிட்டன்ஸ்' என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.