லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் பலி

2 weeks ago 5

பெய்ரூட்,

கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 19 பேர் காயமடைந்தனர் என்றும் லெபனானில் உள்ள அதிகாரபூர்வ மற்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிவில் பாதுகாப்புக் குழுக்கள், லெபனான் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இஸ்லாமிய சுகாதார ஆணையம் ஆகியவை வான் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளை அகற்றி, காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

மேலும் கிழக்குப் பகுதியில் இருந்து லெபனானின் மையப்பகுதிக்கு முன்னேற முயற்சிக்கும் ஹிஸ்புல்லாவுக்கும், இஸ்ரேலிய ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து மூன்றாவது நாளாக மோதல்கள் நீடித்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மற்றும் கியாமின் கிழக்கு மற்றும் தெற்கு புறநகர்ப் பகுதிகளை நோக்கி ஏவப்பட்ட டஜன் கணக்கான ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை லெபனான் ராணுவம் அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் போர் தொடங்கியதில் இருந்து, லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 867 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் படுகாயம் அடைந்தோர் எண்ணிக்கை 13,047 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 23ம் தேதி முதல், இஸ்ரேலிய ராணுவம் ஹிஸ்புல்லாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக , லெபனான் மீது தீவிர வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில், இஸ்ரேல் தனது வடக்கு எல்லையை தாண்டி லெபனானில் தரைவழி தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article