
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. டிரோன் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் முயற்சிக்கும் நிலையில், இந்தியா அதை முறியடித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மட்டும் இன்றி ராஜஸ்தான் உள்பட எல்லையோர மாநிலங்களிலும் பாகிஸ்தான் அத்துமீறி வருகிறது. இதற்கிடையே, எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஷெல் தாக்குதலையும் பாகிஸ்தான் தொடர்ந்துள்ளது. பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தும் நிலையில், இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் ராஜோரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இதனால் எல்லைப்பகுதியில் உச்ச கட்ட பதற்றம் நிலவி வரும் நிலையில், பொதுமக்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது என்று இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. இந்திய இறையாண்மையை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.