லெட்சுமணப்பட்டியில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு தனியார் சோலார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி

4 hours ago 2

*விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

புதுக்கோட்டை : குளத்தூர் அடுத்த லெட்சுமணப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் நிலத்தை ஆக்கிரமித்த தனியார் சோலார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே லெட்சுமணப்பட்டி கிராமத்தில் தனியார் சோலார் மின் நிறுவனம் சார்பில் சோலார் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்திற்கு பல விவசாயிகள் தங்களுடைய பட்டா நிலங்களை கிரையம் செய்து கொடுத்துள்ளதாகவும், கிரயம் செய்து கொடுக்காத விவசாயிகளின் இடத்தில் அந்த நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாவட்ட கலெட்டரிடம் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலர் பலமுறை குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள பனை மரங்கள் அனைத்தையும், அந்த நிறுவனம் வெட்டி அழித்துள்ளதாகவும், விவசாயிகள் தாசில்தார் உள்ளிட்ட அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

இந்த சோலார் பிளான்ட் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் லெட்சுமணப்பட்டி பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், குறைதீர் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியாமல் திணறினர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இலுப்பூர் ஆர்டிஓ அக்பர் அலி, குளத்தூர் தாசில்தார் சோனை கருப்பையா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடைத்து போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அருணாவை சந்தித்து மனு அளித்தனர்.

The post லெட்சுமணப்பட்டியில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு தனியார் சோலார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி appeared first on Dinakaran.

Read Entire Article