ஸ்ரீநகர்,
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று ஸ்ரீநகரில் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிடல்ஸ் - மணிபால் டைகர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 185 ரன்கள் எடுத்தது.
இந்தியா கேப்பிடல்ஸ் தரப்பில் அதிரடியாக ஆடிய பென் டங் 97 ரன்கள் எடுத்தார். மணிபால் தரப்பில் அதிகபட்சமாக குணரத்ன 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 186 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மணிபால் டைகர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா கேப்பிடல்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது. மணிபால் தரப்பில் அதிகபட்சமாக அனுரீத் சிங் 50 ரன் எடுத்தார். இந்தியா கேப்பிடல்ஸ் தரப்பில் இக்பால் அப்துல்லா, தவால் குல்கர்னி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.