
பெல்காம்,
கர்நாடகாவில் பெல்காம் மாவட்டத்தில் ராய்பாக் தாலுகாவுக்கு உட்பட்ட மேகாலி கிராமத்தில் ராமர் கோவில் ஒன்று உள்ளது. இதன் பூசாரியாக இருப்பவர் லோகேஸ்வரா மகராஜ்.
இந்நிலையில், 17 வயது இளம்பெண் ஒருவரை, வீட்டில் கொண்டு சென்று இறக்கி விடுகிறேன். லிப்ட் தருகிறேன் என கூறி அவரை காரில் அழைத்து சென்றார். ஆனால் அவருடைய வீட்டுக்கு செல்லாமல், காரை ராய்ச்சூரில் உள்ள விடுதிக்கு கொண்டு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தொடர்ந்து, பாகல்கோட்டில் உள்ள விடுதிக்கு கொண்டு சென்று மற்றொரு முறை இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த இரு சம்பவங்களுக்கு பின்பு, பெலகாவியில் பஸ் ஸ்டாண்ட் ஒன்றில் அந்த இளம்பெண்ணை விட்டு விட்டு, அவர் தப்பி விட்டார். நடந்த சம்பவம் பற்றி வீட்டுக்கு வந்த பின்னர் இளம்பெண் அவருடைய பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து பூசாரிக்கு எதிராக பாகல்கோட்டில் உள்ள நவநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதன்பின்னர் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மூடலகி காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு, பூசாரியை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி பெலகாவி போலீஸ் சூப்பிரெண்டு பீமாசங்கர் எஸ். குலெட் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.