லார்ட்ஸ் டெஸ்ட்: இறுதிவரை போராடிய இந்திய அணி - பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

5 hours ago 3

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனி ஆளாக போராடிய ஜடேஜா 61 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி 23-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றிக்காக இறுதிவரை போராடிய இந்திய அணியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டோம். ஜடேஜா, பும்ரா, சிராஜ் இறுதி வரை போராடினார்கள். நன்றாக முயற்சித்தார்கள். இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக முயற்சி செய்தது. இங்கிலாந்து சிறப்பாக பந்து வீசி அழுத்தத்தை கொடுத்து, அவர்கள் விரும்பிய முடிவை ஏற்படுத்திக் கொண்டனர். கடுமையாகப் போராடி வென்றதற்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.


So near, yet so far….
Jadeja, Bumrah, & Siraj fought all the way till the end. Well tried, Team India.
England played well to keep the pressure on and produced the result they desired. Congratulations on a hard fought win.

— Sachin Tendulkar (@sachin_rt) July 14, 2025

Read Entire Article