லாப நோக்கமின்றி 15 வகையான மளிகை பொருட்கள் ரூ.499க்கு விற்பனை: அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்தார்

3 weeks ago 4

சென்னை: அமுதம் மக்கள் அங்காடியில் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான 15 வகையான மளிகை பொருட்கள் ரூ.499க்கு விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார். பண்டிகை காலங்களை கவனத்தில் கொண்டும், விலைவாசியை குறைக்கும் விதமாகவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் 15 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பின் விற்பனையை லாபநோக்கமின்றி ரூ.499 விலையில் “அமுதம் பிளஸ் மளிகைத்தொகுப்பு ” என்ற பெயரில் நேற்று கோபாலபுரம் அமுதம் மக்கள் அங்காடியில் அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார். மஞ்சள்தூள், உப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, புளி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வறுகடலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகிய பொருட்கள் இந்த மளிகை தொகுப்பில் அடங்கியுள்ளன.

இந்த மளிகை தொகுப்பின் விற்பனை முதற்கட்டமாக சென்னையில் கோபாலபுரம், அண்ணாநகர், பெரியார் நகர் அமுதம் மக்கள் அங்காடிகளிலும், அடையாறு, சூளைமேடு, சிந்தாதிரிப்பேட்டை, கலைஞர் கருணாநிதி நகர், நந்தனம் பகுதிகளில் உள்ள 10 அமுதம் நியாய விலை கடைகளிலும் செயல்படுத்தப்படுகிறது.

நிகழ்ச்சியில் எம்பி தயாநிதி மாறன், கூட்டுறவு, உணவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன், சென்னை மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சிற்றரசு, 9வது மண்டல குழு தலைவர் எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் நந்தினி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் பழனிசாமி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் மோகன் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

The post லாப நோக்கமின்றி 15 வகையான மளிகை பொருட்கள் ரூ.499க்கு விற்பனை: அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article