![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/36391067-kushi.webp)
மும்பை,
கடந்த 2022-ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படம் தற்போது இந்தியில் 'லவ்யப்பா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
அத்வைத் சந்தன் இயக்கத்தில் நடிகர் ஆமீர்கானின் மூத்தமகன் ஜுனைத், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த மாதம் 7-ந்தேதி வெளியாக உள்ளது.
தற்போது படத்தின் புரமோஷன் பணி நடைபெற்று வருகிறது. அப்போது குஷி கபூர் படத்தில் தான் நடிக்கும் பானி கதாபாத்திரம் பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறுகையில்,
"படப்பிடிப்பிற்கு முன்பு நான் அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்திருந்தேன். அப்போது இயக்குனர் அத்வைத் என்னிடம் வந்து, 'உங்களால் சத்தமாக பேச முடியுமா?. இந்தப் படத்தில் உங்கள் கதாபாத்திரம் கத்தி பேச வேண்டும் என்றார். அதற்கு நான் முயற்சிக்கிறேன் என்றேன். அதன்பிறகு, நான் அதை செய்தேன், 'இந்தக் குரல் எங்கிருந்து வந்தது?' என எனக்கு நானே ஆச்சரியப்பட்டேன். அப்படி நடித்தது வேடிக்கையாக இருந்தது' என்றார்.