“வீராவேசம் பேசிய தமிழக தாமரை பொறுப்பு தலைவர் மவுன சாமி ஆகி போனது ஏன்..” என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டில் மலராத கட்சியின் மாநில தலைவராக இருந்த மாஜி போலீஸ்காரர் அரசியல் படிக்கப்போறேன்னு லண்டன் போயிட்டாரு.. இலைக்கட்சியோட கூட்டணியில இருந்தபோது, தனது தலைமையில்தான் கூட்டணி செயல்படவேண்டுமென அதிரடி காட்டினாரு. ஆனால் அரசியலில் பழம் தின்னு கொட்டைபோட்ட இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரரு, சமயம் பார்த்து டாட்டா காட்டிட்டு போயிட்டாரு.
இதனால டெல்லி தலைமை ரொம்பவே ஷாக்காயிட்டாங்க. இதற்கு காரணமான மாஜி போலீஸ்காரர் மீது ரொம்பவே அதிருப்தியில இருந்தாங்க. பொறுப்பில் இருந்து தூக்கிட்டு, டெல்லி கொண்டுபோக திட்டமிட்டிருந்தாங்க.. இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவமானமாகி போகிடுவோமுன்னு நினைத்து லண்டனுக்கு போனதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. இந்த காலக்கட்டத்தில் கட்சியை வழிநடத்த பொறுப்புகுழு ஒன்றை அமைச்சாங்களாம்.. இதற்கு மாஜி தலைவரான சர்ச்சைக்கு பெயர்போனவரை போட்டாங்களாம்.
அவரும் வானத்தை வில்லாக வளைப்பேன் என கூவினாராம்.. ஆனால் சமீபகாலமாக எந்த சத்தமும் வெளியே வரமா கமுக்கமா இருக்காராம்.. இதில் ஒரு டீல் இருப்பதாக கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க.. பொறுப்பு தலைவருக்கு அரசியலில் இனிமேல் கால் பதிக்க முடியாது.. இதனை நன்றாக தெரிந்து கொண்ட லண்டன் மாஜி ரகசியமாக பேசினாராம்.. நான் வரும்வரை யாரையும் உள்ளே விடாமல் தலைவராக இருந்து பார்த்துக்கொள்ளுமாறும், திரும்பி வந்தபிறகு, மேலிடத்தில் செல்வாக்கை பயன்படுத்தி கிண்டியில் பதவி வாங்கித்தாரேன்னும் சொன்னாராம்.
இந்த டீல் ரொம்பவே பிடித்துப் போனதால் பொறுப்பு தலைவர் மவுனம் காத்து வருவதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. அவரும் லண்டனில் இருந்து அவர் வருவாரான்னு ராகம் போட்டுக்கிட்டிருக்காராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பணியிட மாறுதல் பட்டியலைக் கண்டு கலங்கிப் போயிருக்கிறார்களாமே காக்கிகள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் தொடரும் சிறுமிகள் பாலியல் விவகாரத்தால் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
இதுஒருபுறமிருக்க இரண்டு தினங்களுக்கு முன்பு ரோந்துப் பணியின்போது போதையில் இருந்த ஆசாமியிடமிருந்து சிக்கிய ப-விட்டமின் சூட்கேசை கைப்பற்றிய நகர பகுதி காவல்நிலைய அதிகாரி ஒருவர், மக்கள் பிரதிநிதி ஒருவரிடம் பேசி பணத்தை பங்கு வைத்த விவகாரம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்தது. தன் மீதான குற்றச்சாட்டை ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த சத்திய பிரமுகரான அந்த அதிகாரி, மறுத்து பந்தை திருப்பி அடித்தார்.
ஆனால் உஷாரான மக்கள் பிரதிநிதியோ காக்கிகள் வழக்கம்போல் கடமையை செய்ய வேண்டியதுதானே, ஆவணங்களின்றி குறிப்பிட்ட தொகைக்குமேல் பணம் சிக்கினால் ஐடி, ஈடிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற அடிப்படைகூட தெரியாதா என்று தடாலடியாக கூறவே ஆடிப்போய் இருக்கிறதாம் காக்கித் தரப்பு. இதன் தாக்கம் அடுத்த வாரம் காவல்துறை வட்டாரத்தில் ஒலிக்கலாம் என காக்கிகளிடம் பேச்சுகள் அடிபடுகிறது. அதாவது விடுப்பில் உள்ள மேலதிகாரி அடுத்த வாரம் பணிக்கு திரும்பியதும் எஸ்பி முதல் காவலர்கள் வரை பணியிட மாறுதல் பட்டியல் தயாரித்து ஒப்புதலுக்கு ரெடியாக இருப்பதாக தகவல் கசிந்து வருகின்றன.
மேற்கண்ட சம்பவத்தை விசாரித்த குழுவோ அதன் ரகசிய அறிக்கையை தலைமையிடம் ஒப்படைத்து விட்டதால் என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்ற கதிகலக்கத்தில் இருக்கிறதாம் சம்பந்தப்பட்ட காவல் நிலைய தரப்புகள்’’ என்றார் விக்கியானந்தா ‘‘வேறென்ன காக்கி விவகாரம் இருக்கு..’’ என ஆர்வத்தோடு கேட்டார் பீட்டர் மாமா. ‘‘குயின் பேட்டை மாவட்டத்துல தி என்று தொடங்குற 3 எழுத்து காக்கிகள் நிலையம் இருக்குது. அந்த நிலையத்துல தனி ராஜ்ஜியமே நடக்குதாம். அங்க இருக்குற ஸ்டார் காக்கிகள் எல்லாத்துக்கும் ஒரு ரேட் பிக்ஸ் செஞ்சிருக்காங்களாம்.
சொத்து பிரச்சனையா, பணம் கொடுக்கல் வாங்கலா, வழக்கு போடாம பேச்சுவாரத்தையில முடிக்கணுமா, இப்படி எல்லாத்துக்கும் ஒரு ரேட் வெச்சிருக்காங்களாம். கேஸ்போட்டுட்டு கைது செய்யாம இருக்கணுமா, கேஸ்ல தொடர்புள்ளவங்க கவர்மென்ட் வேலையில இருந்தா, அவங்களை அதுல இருந்து நீக்க ஒரு ரேட், இப்படி தொட்டத்துக்கெல்லாம் ரேட் போட்டு வசூல் வேட்டை நடத்துறாங்களாம். சமீபத்துல காக்கிகள் நிலையத்துல ரெய்டு நடத்தி தடை செய்த புகையிலை பொருட்களை பிடிச்சாங்களாம்.
பிடிச்சது என்னமோ 4 பேராம். ஆனா ஒருத்தர் மேல மட்டும் கேஸ் போட்டாங்களாம். மத்த 3 பேரையும் விட்டுட்டாங்களாம். காரணம் அவங்க 50 கே கொடுத்ததாக சொல்றாங்க. இப்படி அந்த 3 எழுத்து காக்கிகள் நிலையத்து மேல கம்ப்ளய்ன்ட் அதிகளவு வருது. உயர் காக்கிகள் விசாரணை செஞ்சி நடவடிக்கை எடுக்கணும்னு ஜனங்க எதிர்பார்க்குறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘10 பேர் கொண்ட குழுவில் இடம் பெறாததால் சேலத்துக்காரர் மீது டெல்டாவை சேர்ந்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்கிறார்களே.. உண்மையா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவை சேலத்துக்காரர் அமைத்துள்ளார். இந்த குழுவில் மனுநீதிசோழன், கடலோரம், மன்னர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லையாம்… டெல்டா மாவட்டத்தை பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு நபரை மட்டும் இந்த குழுவில் சேர்த்தால் மற்ற மாவட்ட நிர்வாகிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் என சேலத்துக்காரர் நினைத்துள்ளார்.
இதனாலேயே டெல்டாவில் உள்ள நிர்வாகிகள் குழுவில் இடம் பெற வில்லையாம்…. இருந்தாலும் டெல்டாவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சேலத்துக்காரர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த தகவல் சேலத்துக்காரரின் கவனத்துக்கு மூத்த நிர்வாகிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்…’’ என்று சொல்லி முடித்தார் விக்கியானந்தா.
The post லண்டனுக்கு படிக்க போனவர் பொறுப்பு தலைவரோட போட்ட ‘டீல்’ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.