ஹைதராபாத்: தெலுங்கானா மாநில அரசு மேற்கொண்ட சாதிவாரி கணக்கெடுப்பில் 50% அதிகமாக பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளது தெரியவந்துள்ளது. 2023ம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்ற பரப்புரையின் போது காங்கிரஸ் ஆட்சியமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார். சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்த தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில் தெலுங்கானாவில் மொத்த மக்கள் தொகையான 3.70 கோடி பேரில், 3.50 கோடி பேர் கணக்கெடுப்பில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 46.25% அதாவது 1 கோடியே 64 லட்சம் பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள இஸ்லாமியர்கள் -10.08% அதாவது 35 லட்சத்தி 76 ஆயிரம் பேரும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை -56.33% ஆக உள்ளது.
பிற்படுத்தப்பட்டோரை தொடர்ந்து பட்டியலினத்தவர்கள்- 17.43%, பழங்குடியினத்தவர்- 10.45% உள்ளனர். இதரப் பிரிவினர் -15.79% உள்ளதாக சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நாளை தெலுங்கானா மாநில அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு பின் விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மாநில அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
The post தெலுங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியீடு: மொத்த மக்கள் தொகையில் 3.50 கோடி பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.