லட்சங்களை வழங்கும் செம்மறி ஆடுகள்!

3 months ago 11

“கோவையில் லெதர் டெக்னாலஜி படிச்சிருக்கேன். சூடான், சிங்கப்பூரில் 20 வருடமாக சூப்பர்வைசராக பணிபுரிந்தேன். சிங்கப்பூருக்கு வரும் அனைத்து லெதரும் நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவையாக இருக்கின்றன. இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இன்றைக்கும் வெளிநாடுகளுக்கு தோல்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியாவின் பங்கு மிக அதிகம். ஆனால் ஆடுகள் தோலுக்காகவும், பாலுக்காகவும்தான் என சிலர் கூறுகிறார்கள். உடலுக்குத் தேவையான சக்தி புரோட்டினில்தான் அதிகம் நிறைந்திருக்கிறது. பணம் இருப்பவன் புரோட்டின் பவுடர் வாங்கி சாப்பிடுவான். இல்லாதவன் கறிதான் சாப்பிடுவான். சிங்கப்பூரில் காமாலை நோயால் பாதிக்கப்படுவர்கள் அதிகம். நாம் ஓரளவு அந்த விசயத்தில் நன்றாக இருக்கிறோம் என்றால் நமது அசைவ உணவுப்பழக்கம்தான் காரணம்’’ என அதிரடியாக பேசத் துவங்கினார் லெனின்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆவணம் பகுதியைச் சேர்ந்தவர்தான் இந்த லெனின். வெளிநாடுகளில் பணிபுரிந்த இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி செம்மறி ஆட்டுப்பண்ணை நடத்திவருகிறார். இதில் நல்ல வருமானமும் கிடைக்கிறது எனக்கூறும் லெனின் தனது செம்மறி ஆடுகள் வளர்ப்பு அனுபவத்தை சற்று விரிவாக எடுத்துரைத்தார்.“முதன்முதலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஒரு ஜோடி செம்மறி ஆட்டினை ரூ.13 ஆயிரத்திற்கு வாங்கி வந்தேன். இன்றைக்கு அந்த ஆடுகள் 300 என்ற அளவில் பல்கிப் பெருகி உள்ளன. ஆடுகளுக்கு 60×30 என்ற கணக்கில் இரண்டு பட்டிகள் அமைத்திருக்கிறேன். இதன்மேல் ஆஸ்பெட்டாஸ் ஷீட் மட்டுமே போட்டிருக்கிறேன். மேற்கூரையை 10 அடிக்கு மேல் போட்டுள்ளதால் கொட்டகைக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது.

பொதுவாகவே ஆடுகளின் வளர்ச்சிக்கு தீவனம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. நான் எனக்கு சொந்தமான நிலத்தில் ஆடுகளுக்கான தீவனப்பயிர்களை வளர்க்கிறேன். கடலை, கொத்தவரங்காய் உள்ளிட்டவற்றை வளர்ச்சியின் இடைப்பட்ட காலத்தில் அறுவடை செய்வோம். அதை ஒரு வாரம் தண்ணீர் படாமல் காயவைத்து ஆடுகளுக்கு கொடுப்போம். இந்தத் தீவனத்தை நன்கு வளர்ந்த ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 கிலோ வரை கொடுப்போம். இதுபோக பசுந்தீவனங்களில் வேலிமசால், முயல்மசால், குதிரை மசால் வளர்த்து, அவற்றை வெட்டி ஆடுகளுக்கு போடுகிறோம். அடர்தீவனத்தில் உடைத்த சோளம் உள்ளிட்டவற்றையும் வழங்குகிறோம். இவை அனைத்தையுமே பஞ்சகவ்யம், தேமோர்கரைசல், எருவுரம் இட்டு இயற்கை முறையிலேயே விளைவித்து ஆடுகளுக்கு கொடுத்து வருகிறோம்.

பொதுவாக ஆட்டுப்பண்ணைக்குள் சென்றால் கடுமையான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் கால்நடைகளுக்கு அதிக ஒவ்வாமையை ஏற்படும். இதனை சரிசெய்ய காலை, மாலை வேளைகளில் பண்ணையைச் சுத்தம் செய்துவிடுவேன். இந்த முறையை நாங்கள் கடைப்பிடிப்பதன் மூலம் ஆடுகளை நோய்களில் இருந்து பாதுகாக்கிறோம். வருடம் ஒருமுறை ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசியை (பி.ஆர்.பி) அரசு கால்நடை மருத்துவர் மூலம் போடுகிறோம். இந்த தடுப்பூசியை மழைக்காலம் தொடங்குவதற்கு முன் போட வேண்டும். மேலும் 3 மாதத்திற்கு குடல்புழு நீக்க மருந்தையும் வழங்கி வருகிறோம். இந்த மருந்துகளைக் கொடுத்த பின்பு 3 மணி நேரத்திற்கு ஆடுகள் எந்தவொரு தீவனத்தையும் சாப்பிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அடுத்த முறை குடல் புழு நீக்கத்திற்கு இந்த மருந்தினை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். இதற்கு மாற்றாக வேறொரு மருந்தைப் பயன்படுத்துகிறோம்.செம்மறி ஆடுகளை 20 லிருந்து 40 கிலோ வந்தவுடன் விற்பனை செய்துவிடுவோம். ஒரு வடத்திற்கு சராசரியாக 250 ஆடுகளை விற்பனை செய்வேன். செம்மறி ஆட்டினை உயிர் எடையுடன் ஒரு கிலோ ரூ.400 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். சராசரியாக ஒரு ஆடு 30 கிலோ இருக்கும். ஒரு ஆட்டினை ரூ.14 ஆயிரத்துக்கு விற்பனை செய்கிறேன். செம்மறி ஆடுகளை விற்பனை செய்வதில் ஒரு வருடத்திற்கு ரூ.30 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. தீவனச் செலவு இல்லை. ஆடுகளுக்கு கொடுக்கும் மருந்துக்கான செலவு ரூ.90 ஆயிரம் வரை ஆகும். ரூ.1 லட்சம் செலவு போனால் கூட ரூ.29 லட்சம் லாபமாக கிடைக்கிறது. கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் தாங்களே தீவனத்தை உற்பத்தி செய்து ஆடு, மாடுகளுக்கு கொடுத்தால் நல்ல லாபம் பார்க்கலாம்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
லெனின்: 98658 53880.

துள்ளுமாரி நோய் பரவிய ஆடுகள் துள்ளித் துள்ளி இறந்துவிடும். துள்ளுமாரி நோயானது, இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடுகளையே பெரும்பாலும் தாக்கும். இக்கிருமி இயல்பாகவே மண்ணில் பரவி இருக்கும். மேலும், செம்மறியாட்டின் குடலிலும் சிறிதளவில் இருக்கும். மழைக்காலமான ஜூலை-அக்டோபரில் இந்நோய் அதிகமாக இருந்தாலும், வெயில் காலமான மார்ச்-ஜூன் மற்றும் குளிர் காலமான நவம்பர்-டிசம்பரிலும் இளம் செம்மறியாடுகளைத் தாக்கும். இதனைக் கட்டுப்படுத்த துள்ளுமாரி டாக்சாய்டு ஊசியை ஆண்டுக்கு ஒருமுறை மழைக்காலத்திற்கு முன்னர் போட வேண்டும். குட்டி ஈனும் பருவங்களில் உள்ள தாய் ஆடுகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம்.

 

The post லட்சங்களை வழங்கும் செம்மறி ஆடுகள்! appeared first on Dinakaran.

Read Entire Article