லட்சக்கணக்கில் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நெல்லை – எழும்பூர் சிறப்பு ரயில்: மாற்றுப்பாதையில் இயக்க பயணிகள் விருப்பம்

1 month ago 8


நெல்லை: நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலால் லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதால், அந்த ரயிலை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்துள்ளனர். நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு (எண். 06070) வாராந்திர சிறப்பு ரயில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது நெல்லையிலிருந்து கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, பேராவூரணி, காரைக்குடி, பட்டுக்கோட்டை, அபிராமப்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் என நீள்வட்ட பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இந்த ரயில் நெல்லையிலிருந்து அம்பை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்தது. அப்போது நல்ல லாபத்தில் இயக்கப்பட்டது.

நெல்லை – பிலாஸ்பூர் காலி ரயில் பெட்டிகளை கொண்டு இயக்கப்பட்டு வரும் இந்த ரயிலில் ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டியும் (கட்டணம்: ரூ.1905), 6-மூன்றடுக்கு ஏசி பெட்டிகளும்(கட்டணம்: ரூ.1340), 2-மூன்றடுக்கு எக்கனாமிக் ஏசி பெட்டிகளும் (கட்டணம்: ரூ.1240), 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள பெட்டிகளும் (கட்டணம்:ரூ.495), 3 முன்பதிவில்லாத பெட்டிகளும், 2 லக்கேஜ் பெட்டிகளும் உடன் சேர்த்து மொத்தம் 22 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஆனது எல்எச்பி எனப்படும் ஜெர்மன் தொழில்நுட்ப பெட்டிகளை கொண்டதாகும். இந்த ரயில் சேவை சமீபகாலமாக நெல்லையிலிருந்து சுற்றுவட்ட பாதையில் இயக்கப்படுவதால், பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் ரயில் காலி பெட்டிகளோடு செல்வதால், வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக கடந்த 26ம் தேதி வியாழக்கிழமை அன்று மாலையில் இயக்கப்பட்ட இந்த ரயிலில் ஸ்லீப்பர் பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் மட்டுமே முற்றிலுமாக நிரம்பி வழிந்தன. மற்றபடி இரண்டு அடுக்கு ஏசி பட்டியலில் 21 இருக்கையிலும், மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் 343 இருக்கைகளும், மூன்றடுக்கு எக்கனாமிக் ஏசி பெட்டிகளில் 71 இருக்கைகளும் காலியாக சென்றதால் ரயில்வேக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிய வருகிறது. இதுகுறித்து நெல்லை, தென்காசி மாவட்ட பயணிகள் சங்க நிர்வாகி கடையம் அந்தோணி கூறுகையில், ‘நெல்லை – எழும்பூர் சிறப்பு ரயில் இப்போது வியாழன் தோறும் நீள்வட்ட பாதையில் போதிய கூட்டமின்றி செல்கிறது. கடந்த 26ம் தேதி மட்டுமே இந்த ரயிலில் இடங்கள் நிரம்பாததால், சுமார் ரூ.5லட்சத்து 87 ஆயிரம் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் மற்ற ரயில்களை விட இந்த ரயிலில் கட்டணமானது 1.3 மடங்கு அதிகம். வேறு வழி இன்றி இந்த ரயிலை தென் மாவட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அன்றைய தினம் நெல்லையிலிருந்து மாலை 6:45 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில், சென்னைக்கு காலை 8:30 மணிக்கு செல்லாமல், காலை 10:45 மணிக்கு எழும்பூர் சென்றடைந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதற்குப் பின்னர் சென்ற புறப்பட்டு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி, செந்தூர், முத்துநகர் எக்ஸ்பிரஸ்கள் எல்லாம் அதற்கு முன்பாக சென்னையை சென்றடைந்து விட்டன. இந்த ரயிலில் கட்டணமும் அதிகம், பயண நேரமும் அதிகம் என்பதால் பயணிகள் சென்னை செல்ல சிரமப்படுகின்றனர். எனவே இந்த ரயிலை முன்பு போல தென்காசி மார்க்கமாகவோ அல்லது நேர் வழியிலோ இயக்கிட வேண்டும்.’’ என்றார்.

The post லட்சக்கணக்கில் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நெல்லை – எழும்பூர் சிறப்பு ரயில்: மாற்றுப்பாதையில் இயக்க பயணிகள் விருப்பம் appeared first on Dinakaran.

Read Entire Article