அறந்தாங்கி: அறந்தாங்கியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விஜயபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ஹரிஹரசுதன்(17). இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது பெற்றோர் விருப்பத்தின்படி அவரது கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் நேற்று தானம் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடல் விஜயபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடலுக்கு தமிழக அரசு சார்பில் அறந்தாங்கி ஆர்டிஓ சிவக்குமார், தாசில்தார் கருப்பையா, ஆர்ஐ தமிழரசி, விஏஓ சிவக்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
The post மூளைச்சாவு அடைந்த அறந்தாங்கி வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை appeared first on Dinakaran.