சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேலும் 8.5 ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தப்படுகிறது. சென்னை விமான நிலையம் இந்திய அளவில் இருக்கக்கூடிய முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின், எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் அதிகரித்து வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அதிகரித்து வருவதால், கூடுதல் பயணியர் விமானம் மற்றும் சரக்கு விமானங்களை கையாளுவதில் வருங்காலத்தில் சிக்கல் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து சாத்திய கூறுகள் ஆராயப்பட்டன. இறுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு திட்ட செலவு ரூ.29,150 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ‘டிட்கோ’ நிறுவனம் மூலமாக இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் மொத்தமாக இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளன.
சுமார் 3,700 ஏக்கர் நீளம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான பணிகளில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு மேலும் 8.5 ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தப்படுகிறது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் நெல்வாய் கிராமத்தில் 8.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை சார்பில் நிலம் கையக்கப்படுத்தப்படுகிறது. மொத்தம் 196 சர்வே எண்களில் இருக்கும் வீடுமனைகளை கையக்கப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
5,746 ஏக்கரில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு பல கட்டங்களாக நிலம் கையக்கப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பரந்தூர் விமான நிலையத்திற்கான முதல் கட்ட கட்டுமான பணிகளை அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டால், 2028ம் ஆண்டுக்குள் முதற்கட்ட பணிகளில் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேலும் 8.5 ஏக்கர் நிலம் எடுப்பு appeared first on Dinakaran.