லடாக் பனிப் பாலைவனத்தில் ஐஸ் ஹாக்கி போட்டிகள்: 15 அணிகள் பங்கேற்பு

2 months ago 7


லடாக்: லடாக்கின் பனிப் பாலைவனத்தில் ராயல் என்பீல்ட் ஐஸ் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. ஜம்மு காஷ்மீரின் கிழக்கே உள்ள லடாக், ஒரு யூனியன் பிரதேசமாக திகழ்கிறது. லடாக்கின் பல பகுதிகள் பனிப்போர்வையால் போர்த்தப்பட்டு சுவிட்சர்லாந்தில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும். லடாக்கின் உயர்ந்த பகுதிகளில் ஒன்றான பாங்காங் ட்சோ ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 14,370 அடி உயரத்தில் உள்ளது. குளிர் காலத்தில் திடமான பனி மூடப்பட்டு காணப்படும் இந்த ஏரியில் ஹாக்கி களம் அமைத்து, இந்திய ராணுவத்தின் பையர் அண்ட் பியுரி கார்ப்ஸ் பிரிவினர் ஐஸ் ஹாக்கி போட்டியை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளனர். அதுமுதல், லடாக் பகுதியின் முக்கிய விளையாட்டுகளில் ஒன்றாக ஐஸ் ஹாக்கி உருவெடுத்து வருகிறது. இப்போட்டியை பிரபலப்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்த திட்டங்கள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், லடாக்கின் பனிப் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள என்டிஎஸ் ஸ்டேடியத்தில் ஐஸ் ஹாக்கி போட்டிகளை நடத்த ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘உலகின் குளிர் கால விளையாட்டுகளில் ஐஸ் ஹாக்கி போட்டிகள் முன்னணி வகிக்கின்றன. அதிவிரைவாக விளையாடக்கூடிய குழு போட்டியாக இது திகழ்கிறது. லடாக் பிராந்தியத்தின் கலாச்சாரத்தில் கலந்த ஒரு விளையாட்டாக ஐஸ் ஹாக்கி உருவெடுத்துள்ளது. இது தொடர்பான போட்டிகளில் ஏராளமான வீரர்களும், பார்வையாளர்களும் உற்சாகமாக கலந்து கொண்டு வருகின்றனர்’ என்றார்.

மேலும், ‘வரும் 2025 ஜனவரியில், லடாக்கின் லே பகுதியில் உள்ள என்டிஎஸ் ஸ்டேடியத்தில் நடக்க உள்ள ஐஸ் ஹாக்கி போட்டியில் 10 ஆண்கள் அணிகளும், 5 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு மோத உள்ளன’ என அவர் கூறினார். ஐஸ் ஹாக்கி போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடக்க உள்ளன. இறுதியில் நாக்அவுட் போட்டிகளும், தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளும் நடக்க உள்ளன. வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சுழல் கோப்பையும் பணப்பரிசு மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட உள்ளன.

The post லடாக் பனிப் பாலைவனத்தில் ஐஸ் ஹாக்கி போட்டிகள்: 15 அணிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article