லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறும் பணி நிறைவு

2 months ago 14

புதுடெல்லி,

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்த நிலையில், சீன வீரர்கள் பலரும் உயிரிழந்தனர். இதையடுத்து கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருநாடுகளும் தங்கள் படைகளைக் குவித்தன.இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா-சீனா எல்லையில் பதற்றமான சூழல் நீடித்து வந்தது. மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகளும் ராணுவம் மற்றும் தூதரக ரீதியில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தின.

இந்த சூழலில் கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் ரோந்து செல்வது தொடர்பாக சீனாவுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு கடந்த 21-ந் தேதி அறிவித்தது.அதன் தொடர்ச்சியாக கடந்த 23-ந் தேதி ரஷியாவின் கசான் நகரில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் இருதரப்பு உறவை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது.

அதன் பயனாக, சில நாட்களுக்கு முன் படைகள் ரோந்து செல்வது தொடர்பாக இருநாட்டு ராணுவத்தினர் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இரு தரப்பும் நேருக்கு நேர் சந்திக்கும் நிலையில் இருக்கும் படைகளை வாபஸ் பெற்றுக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கடந்த சில நாட்களாக படைகள் வாபஸ் பெறும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், எல்லையில் படை குறைப்பு நிறைவு பெற்றுள்ளது.

ராணுவ வட்டாரங்கள் கூறுகையில்,'இந்தியா - சீனா இடையேயான ஒப்பந்தத்தின் கீழ், கிழக்கு லடாக்கின் டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் படையினர் வாபஸ் பெறப்பட்டனர். இந்த பணி சுமுகமாக நடந்தது. படையினர் வாபஸ் பெறப்பட்டு பிந்தைய சரிபார்ப்பு செயலில் உள்ளது.

2020 மே மாதத்துக்கு முன்பு இருந்ததுபோல், மீண்டும் எல்லையில் ரோந்துப் பணிகளில் ராணுவம் ஈடுபடும் என்று ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், நாளை தீபாவளி திருவிழா நாள் என்பதால், இரு நாட்டு ராணுவத்தினர் இடையே இனிப்புகள் பரிமாற்றம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read Entire Article