
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அடுத்தடுத்து அறிவித்துள்ளனர். கடந்த 7-ம் தேதி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் தற்போது விராட் கோலியும் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல்முறையாக இந்தியா 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை கோட்டைவிட்டது. இந்த தோல்வியினால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இந்த தொடர்களில் முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங் மோசமாக இருந்தது. இதனால் சீனியர் வீரர்களான இருவர் மீதும் கடும் விமர்சனம் எழுந்தது. இதனால் இருவரும் ஓய்வு பெற வேண்டும் என்று சொந்த நாட்டு ரசிகர்களே விமர்சித்தனர்.
இருப்பினும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இருவரும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்துள்ளது பலரது மத்தியில் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. ஏனெனில் சமீபத்திய பேட்டிகளில் கூட இருவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்ததன் பின்னணியில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான தகவலின் படி, "2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கவுதம் கம்பீர் புதிய அணியை கட்டமைக்க விரும்புவதாக தெரிய வந்துள்ளது. அதனாலேயே விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை கழற்றி விட தேர்வு குழுவுக்கு அவர் பரிந்துரைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு புதிய வீரர்களை கொண்டிருப்பது பொருத்தமானது என்று தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கரும் கருதுவதால் அவருடைய ஆதரவையும் கம்பீர் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.