
மும்பை,
விராட் கோலிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது.
2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.
எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை ரோகித் கேப்டனாக இருப்பார் என்று அனைவரும் நினைத்த வேளையில் அவர் ஓய்வை அறிவித்தது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது 38 வயதான ரோகித் சர்மா 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோகித் சர்மாவை, நேரில் அழைத்து மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்தி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை எனது அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் வரவேற்று, சந்தித்து, உரையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கும், அவரது பயணத்தின் அடுத்த அத்தியாயத்தில் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.