
நெல்லை,
நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் தாமிரபரணி படித்துறை பகுதியில் குளித்துக் கொண்டிருந்த ஆண் ஒருவர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி விட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், ஆற்றில் மூழ்கியவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மாலை வரை தேடுதல் பணி நடைபெற்ற நிலையில், ஆற்றில் மூழ்கியவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடுதல் பணியை கைவிட்டனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். இருசக்கர வாகனம் ஒன்று கேட்பாரற்ற நிலையில் வண்ணாரப்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்ததை தொடர்ந்து, ஆற்றில் குளிக்க சென்ற நபர் யார் என்பது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக தீயணைப்புத் துறையினர் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் தேடுதல் பணியை தொடங்கினர். இதனிடையே ஆற்றில் மூழ்கிய நபரின் பெயர் மாடசாமி என்பது தெரிய வந்தது. இதையடுத்து நீண்ட நேரம் தேடுதலுக்கு பின்னர், மாடசாமியின் சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வண்ணாரப்பேட்டை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் உயிரிழப்புகள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, அப்பகுதியில் அபாய எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.