ரோகித் சர்மா ஏன் ஓய்வு பெற வேண்டும்..? தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஆதரவு

3 hours ago 1

மும்பை,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தொடர் நிறைவடைந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஓய்வு பெற்று விடுவார் என யூகங்கள் கிளம்பின. ஆனால் கோப்பையை வென்றதும் பேட்டி அளித்த 37 வயதான ரோகித் சர்மா, இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் இல்லை, இது குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் 37 வயதானாலும் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு கோப்பையை வென்றுக் கொடுத்துள்ள ரோகித் சர்மா ஓய்வு பெற வேண்டிய அவசியமில்லை என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஒருநாள் கிரிக்கெட்டில் மற்ற கேப்டன்களுடன் ஒப்பிடும்போது ரோகித் சர்மாவின் வெற்றி சராசரி விகிதத்தை பாருங்கள். அது கிட்டத்தட்ட 74 சதவீதம். இறுதிப்போட்டியில் 76 ரன்கள் அடித்த அவர் உச்சகட்ட அழுத்தத்தில் இந்தியாவின் வெற்றிக்கான நல்ல அடித்தளத்தைக் கொடுத்தார். எனவே ரோகித் ஓய்வு பெறுவதற்கும் விமர்சனங்களை சந்திக்கவும் காரணம் இல்லை. அதை அவருடைய சாதனைகள் பேசுகின்றன.

இது போக அவர் தன்னுடைய ஆட்டத்தை மாற்றியுள்ளார். இதற்கு முன் பவர் பிளே ஓவர்களில் கொஞ்சம் மெதுவாக விளையாடிய அவருடைய ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தது. ஆனால் 2022க்குப்பின் 115 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் அவர் சிறந்த தொடக்கத்தை கொடுத்து வருகிறார். அப்படி நீங்கள் உங்களுடைய ஆட்டத்தை மாற்றுவது சிறந்த விஷயம் நீங்கள் எப்போதுமே எதையாவது கற்றுக் கொண்டு முன்னேறலாம்.

ஒரு இந்திய ரசிகராக நீங்கள் ரோகித் சர்மாவால் பெருமைப்பட வேண்டும். அவரது பயணம் எப்போதும் சீராக இருப்பதில்லை. வெவ்வேறு பார்மட்டில் வெவ்வேறு பார்மை கொண்டிருக்கும் அவர் மேடு பள்ளங்களைக் கடந்து வருகிறார். ஆனால் ஐ.சி.சி. தொடர் போன்ற கொண்ட பெரிய போட்டிகளில் அவர் முன் நின்று இந்திய அணியை வழி நடத்துகிறார்" என்று கூறினார்.

Read Entire Article