ரோகித் ஓய்வு பெறப்போவது எனக்கு முன்பே தெரியும்- ஆஸி.முன்னாள் கேப்டன்

23 hours ago 1

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் 67 டெஸ்ட், 273 ஒருநாள் மற்றும் 159 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றுள்ளது.

2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் ஓய்வு பெற்றார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி ஓய்வை அறிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித்தை கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ரோகித் சர்மா ஓய்வு பெறப்போகிறார் என்பது சிட்னியில் நடைபெற்ற போட்டியின் போதே தமக்கு தெரியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு: "இது ஒரு விசித்திரமான விஷயம். ஆனால் நான் அவரைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவிடம் பேசியபோது அவருடைய ஓய்வு பற்றி நான் உணர்ந்தேன். அந்தப் போட்டியே அவருடைய டெஸ்ட் கெரியரின் இறுதியாக இருக்கும் என்று கருதினேன். அதைத் தாண்டி ரோகித் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி அனைத்தும் எவ்வாறு செல்கிறது என்பதை பார்க்க முடிவு செய்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அளித்த அற்புதமான பங்களிப்பிற்காக நான் அவரை வாழ்த்துகிறேன். அவர் ஒரு வெள்ளை பந்து மாஸ்டர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இதுவே நமக்கான சரியான நேரம் என்று அவர் உணர்ந்திருக்கலாம். அது போன்றவர்களை நான் எப்போதும் விரும்புவேன். இந்த நேரத்தில் ரோகித் சர்மா தமது வழியில் வரும் அனைத்து பாராட்டுகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்க வேண்டும். ஏனெனில் அவர் அதற்கு முழுமையாக தகுதியானவர்" என்று கூறினார்.

Read Entire Article