சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான துவரம் பருப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு துவரம்பருப்பு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், ஒப்பந்தத்தின்படி உரிய நேரத்தில் துவரம்பருப்பை விநியோகம் செய்யாமல் காலம் தாழ்த்துவதே ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு நிலவ முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் அளவு உயர்த்தி வழங்கப்படும், நிறுத்தப்பட்ட உளுத்தம்பருப்பு மீண்டும் விநியோகம் செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதிகளை தற்போதுவரை நிறைவேற்றாத தி.மு.க. அரசு, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த துவரம்பருப்பையும் முறையாக வழங்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியின்படி 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம்பருப்பை கொள்முதல் செய்வதற்கு பதிலாக தரம் குறைந்த கனடா மஞ்சள் பருப்பை கொள்முதல் செய்வதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு இயற்கையானதா? அல்லது கனடா மஞ்சள் பருப்பை கொள்முதல் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட செயற்கை தட்டுப்பாடா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே, நெருங்கி வரும் தீபாவளிப் பண்டிகையை கருத்தில் கொண்டு ஒப்பந்தம் வழங்கிய நிறுவனங்களிடமிருந்து உரிய துவரம்பருப்பை கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.