
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த ஓராண்டில் மட்டும் 17 ஆயிரம் பேருக்கும் கூடுதலானோருக்கு புதிதாக அரசு வேலைவாய்ப்பு வழங்கப் பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள நிலையில், வரலாறு காணாத வகையில் வேலைகளை வழங்கிவிட்டதாக கூறுவது அப்பட்டமான பொய் ஆகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,''அரசு பணியை எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக, டி.என்.பி.எஸ்.சி. மூலம் 17 ஆயிரத்து 595 காலிப்பணியிடங்கள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. அதன்படி, கடந்த 2024 ஜூன் முதல் நடப்பாண்டு ஜூன் மாதம் வரையில் பல்வேறு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப 17 ஆயிரத்து 702 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்'' என்று கூறப்பட்டிருக்கிறது. எனினும் எந்தெந்தப் பணிகளுக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யபட்டனர் என்ற விவரத்தை டி.என்.பி.எஸ்.சி வெளியிட வில்லை. இது மக்களை ஏமாற்றும் வகையில் வெளியிடப்பட்டுள்ள மிகவும் மோசடியான அறிவிப்பு ஆகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி விதி எண் 110-இன் கீழ் அறிக்கை தாக்கல் செய்து பேசிய முதல்-அலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''வரும் ஜனவரி 2026-க்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 17,595 பேர் உள்பட மொத்தம் 46,584 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்'' என்று அறிவித்தார். அதைக்கேட்டு தமிழ்நாட்டு இளைஞர்களில் பெரும்பான்மையானவர்கள், தங்களுக்கு அரசு வேலை கிடைக்கக்கூடும் என்று மகிழ்ச்சியடைந்திருந்தனர். புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிக்கைகள் வெளியிடப்படும்; அதில் விண்ணப்பித்து அரசு வேலையை வென்றெடுக்கலாம் என்ற எண்ணத்தில் படித்த இளைஞர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தான், 17,702 பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டு விட்டதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. இது படித்த இளைஞர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்,சி மூலம் 17,502 பேருக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார் என்றால், அதற்கான நடைமுறை அதன்பிறகு தான் தொடங்கும். காலியாக இருக்கும் அரசு பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விண்ணப்பித்தவர்களுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவது தான் முறையாகும். ஆனால், சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு 2024-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி, 2025-ஆம் ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி வரை மொத்தம் 12 ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் வாயிலாக நான்காம் தொகுதி பணிகளுக்கு 3935 பேர் உள்பட மொத்தம் 8618 பேர் அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அவர்களுக்கான தேர்வு நடைமுறை பல்வேறு நிலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், எங்கிருந்து 17,702 பேரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்தது என்பதை தேர்வாணையமும், தமிழக அரசும் தான் விளக்க வேண்டும்.
கடந்த காலங்களில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை மிகவும் தாமதமாக அறிவித்து, அவற்றையெல்லாம் புதிய வேலைவாய்ப்புகளாக கணக்குக் காட்ட அரசுப் பணியாளர் தேர்வாணையம் முயல்வதாகத் தெரிகிறது. அப்படி செய்தால் அதை விட பெரிய மோசடியும், முறைகேடும் இருக்க முடியாது. எடுத்துக்காட்டாக தேர்வாணையம் குறிப்பிடும் 17,702 வேலைவாய்ப்புகளில் 9491 பணிகள், அதாவது 54% நான்காம் தொகுதி வேலைவாய்ப்புகள் ஆகும். இதற்கான அறிவிக்கை 30.01.2024-ஆம் நாள் வெளியானது. முதல்-அமைச்சரின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை, முதல்-அமைச்சர் அறிவித்ததால் கிடைத்த வேலைவாய்ப்புகளாக காட்ட முயல்வது மிகப்பெரிய ஏமாற்று வேலை ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மூன்றரை லட்சம் காலியிடங்களை நிரப்புவதன் வாயிலாகவும், 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் வாயிலாகவும் மொத்தம் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்ட காலியிடங்களைக் கூட நிரப்ப முடியாமல் மு.க. ஸ்டாலின் அம்பலப்பட்டு நிற்கிறார். அவருக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய வேலையை திமுக தகவல்தொழில்நுட்பப் பிரிவினர் தான் செய்ய வேண்டும். அந்த வேலையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்வது அதன் தகுதிக்கு உகந்தது அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதை கருத்தில் கொண்டு அதன் கண்ணியத்தைக் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பவர்கள் இளைஞர்கள் தான். ஆனால், அவர்களின் உயர்கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் எந்த நடவடிக்கையையும் திமுக அரசு செய்யவில்லை. அதற்கான பாடத்தை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் கற்பிப்பார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திமுகவின் துணை அமைப்பாக மாறாமல் அதன் பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.