ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நேர்முக தேர்வு: இன்றும், நாளையும் நடக்கிறது

3 months ago 9

 

நாகர்கோவில், டிச.2: குமரி மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் கட்டுனர் பணிக்கு நடந்து வருகின்ற நேர்முக தேர்வு மீண்டும் இன்றும், நாளையும் நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் மொத்தம் 35 விற்பனையாளர், 6 கட்டுனர் என்று மொத்தம் 41 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில் விற்பனையாளர் பணிக்கு 5 ஆயிரத்து 200 பேரும், கட்டுனர் பணிக்கு 789 பேரும் என்று மொத்தம் 5 ஆயிரத்து 989 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான நேர்முக தேர்வு நாகர்கோவில் மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் 500 பேருக்கும், பிற்பகல் 500 பேருக்கும் என்று நேர்முக தேர்வு நடத்த அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அதற்கேற்ப தேர்வு நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக விடுமுறை என்ற நிலையில் விடுமுறைக்கு பின்னர் மீண்டும் இன்றும், நாளையும் நேர்முக தேர்வு தொடர்ந்து நடைபெற இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நேர்முக தேர்வு: இன்றும், நாளையும் நடக்கிறது appeared first on Dinakaran.

Read Entire Article