ரெயில்வே தேர்வில் வினாத்தாள் கசிவு; 26 பேரை கைது செய்தது சி.பி.ஐ.

3 hours ago 1

சந்தவுலி,

உத்தர பிரதேசத்தின் முகல்சராய் பகுதியில், கிழக்கு மத்திய ரெயில்வே சார்பில் தலைமை என்ஜின் ஆய்வாளர்கள் பணிகளுக்கான துறை ரீதியிலான தேர்வு இன்று நடந்தது. அப்போது, ரகசிய தகவலின் அடிப்படையில், 3 இடங்களில் சி.பி.ஐ. அமைப்பு சோதனை மேற்கொண்டது.

இதில், முகல்சராய் பகுதியில் 3 இடங்களில் தேர்வு எழுத வந்த ரெயில்வே ஊழியர்கள் 17 பேர் அறையில், கையால் எழுதப்பட்ட வினாத்தாள்களின் புகைப்பட நகல்களுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, வினாத்தாள் கசிவு தொடர்பாக மூத்த டிவிசனல் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர் (டி.இ.இ.) ஒருவர் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் 8 பேர் மற்றும் தேர்வு எழுத வந்த பெயர் தெரியாத நபர்கள் மற்றும் சிலருக்கு எதிராக வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது.

சி.பி.ஐ. விசாரணையில், நடத்தப்பட்ட தேர்வுக்கான வினாத்தாளை உருவாக்கும் மற்றும் தயாரிக்கும் பணிக்கான பொறுப்பானது, மூத்த டி.இ.இ. அதிகாரிக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அவர் ஆங்கிலத்தில் கேள்விகளை எழுதியுள்ளார். இதன்பின்னர் ரெயில் என்ஜின் ஓட்டுநர் ஒருவரிடம் அதனை தந்துள்ளார் என கூறப்படுகிறது.

அது பின்னர் இந்தியில் மாற்றம் செய்யப்பட்டு, சூப்பிரெண்டு அளவிலான அதிகாரியிடம் தரப்பட்டு உள்ளது. அவர், சில ரெயில்வே ஊழியர்கள் வழியே தேர்வு எழுத வந்தவர்களிடம் அவற்றை கொடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில், மூத்த டி.இ.இ. மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ஆகியோரை, பணம் வசூலிப்பு மற்றும் வினாத்தாள் விநியோகித்தல் ஆகியவற்றுக்காக சி.பி.ஐ. அமைப்பு கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

ஓட்டுநர்களாக பணிபுரிந்த துறை சார்ந்த ரெயில்வே ஊழியர்கள் 17 பேரும், வினாத்தாளுக்காக பணம் கொடுத்ததற்காக, தேர்வு அறையில் வைத்தே வினாத்தாள்களுடன் பிடிபட்டனர். இதனை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.பி.ஐ. அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த வழக்கில் இதுவரை ரெயில் அதிகாரிகள் 26 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை இந்த விவகாரத்தில், 8 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.1.17 கோடி பணமும் கைப்பற்றப்பட்டது. வினாத்தாள்கள், அவற்றின் புகைப்பட நகல்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவை உண்மையான வினாத்தாள்களுடன் சரிபார்க்கப்பட்டன. இதில், இவற்றுடன் அவை பொருந்தியுள்ளன என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Read Entire Article