
சென்னை,
தமிழ் திரையுலகில் இருந்து இன்று பாலிவுட் திரையுலகம் வரை சென்றுள்ள முன்னணி இயக்குனர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் விஜய்யை வைத்து "தெறி, மெர்சல், பிகில்" ஆகிய ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானார்.
பின்னர் பாலிவுட்டில் கலமிறங்கிய அட்லீ, ஷாருக்கானை வைத்து இயக்கிய 'ஜவான்' படம் ரூ. 1,200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது அட்லீ, அல்லு அர்ஜுனை இயக்க உள்ளதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் 5 ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அட்லீயின் ஸ்கிரிப்ட்டின்படி, படத்திற்கு ஐந்து ஹீரோயின்கள் தேவைப்படுவதாக தெரிகிறது. அதில், அமெரிக்க, கொரிய உள்ளிட்ட மூன்று மொழி நடிகைகளை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க அட்லீ யோசித்து வருகிறார்.
மேலும், முக்கிய ஹீரோயின்களாக ஜான்வி கபூரும், மற்றொரு இந்திய நடிகையும் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் மற்றொரு நடிகரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.