"ரெயில்வே கேட் திறந்துதான் இருந்ததா?" - வேன் விபத்தில் படுகாயமடைந்த மாணவர், டிரைவர் கூறிய அதிர்ச்சி தகவல்

7 hours ago 1

கடலூர்,

கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது.

இந்நிலையில், பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே சிதம்பரம் நோக்கி ரெயில் ஒன்று சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர்.

இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், ஒரு மாணவர், ஒரு மாணவி என 2 பேர் பலியாகினர்.

வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தின்போது, ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. ரெயில்வே கேட்டை மூடுவதற்காக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என கூறப்படுகிறது. அவர் பணியின்போது தூங்கியதில் ரெயில் வரும்போது கேட் மூடாமல் விடப்பட்டு உள்ளது. இது விபத்திற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ரெயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் பற்றி ரெயில்வே தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், ரெயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தினார். வேன் போகும் வரை கேட்டை மூட வேண்டாம் என அவர் கூறினார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று கேட்டை பாதி மூடி கொண்டிருக்கும்போது, வேன் ஓட்டுநர் உள்ளே சென்றார் என மற்றொரு தகவலும் கூறப்படுகிறது.

கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் கூறி வரும் நிலையில், ரெயில்வே மாறுபட்ட விளக்கம் அளித்துள்ளது

இந்நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளி வேனில் டிரைவர் மற்றும் 4 மாணவர்கள் பயணித்துள்ளனர். அந்த கோர விபத்தில் சிக்கி மாணவி சாருமதி(15), மாணவர் நிமலேஷ் (10) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மாணவர்கள் செழியன், விஷ்வேஸ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவர், சிகிச்சை பலனில்லாமல் உயிரிந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. பள்ளி வேனை இயக்கிய டிரைவர் சங்கர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதியபோது ரெயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து, படுகாயங்களுடன் அவர் சிகிக்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேன் விபத்தில் படுகாயமடைந்த மாணவர் விஸ்வேஷ் மற்றும் வேன் டிரைவர் ஆகியோர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி வேன் விபத்து சம்பவத்தில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் மாணவர் விஸ்வேஷ் கூறுகையில், "வழக்கமாக செல்லும் பாதையில் சென்றபோது கேட் திறந்துதான் இருந்தது. சிக்னல் எதுவும் போடப்படவில்லை.. ரெயில் வரும் சத்தம் கூட கேட்கவில்லை. பள்ளி வேன் கடந்து சென்றபோது ரெயில் மோதியது. நான் விழுந்து எழுந்திருச்ச போது கூட அந்த கேட் கீப்பர் வர வில்லை. ரெயில்வே கேட்டை வேன் டிரைவர் திறக்க சொல்லவில்லை, கேட் கீப்பர் சொல்வது முற்றிலும் பொய்.." என்று கூறினார்.

வேன் விபத்து சம்பவத்தில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் பள்ளி வேன் ஓட்டுநர் கூறுகையில், "நான் செல்லும்போது கேட் திறந்துதான் இருந்தது.. வாகனத்தில் 4 மாணவர்கள் இருந்தனர்.. நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை.. ரெயில் சென்று விட்டது என நினைத்து கேட்டை கடந்தோம். கேட் கீப்பர் அந்த இடத்தில் இல்லை.. அதனால்தான் வாகனத்தை இயக்கினேன்" என்று கூறினார்.

முன்னதாக கடலூர் பள்ளி வேன்-ரெயில் விபத்து குறித்து திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் கூறுகையில், "காலை 7.10-க்கு ரெயில் வருவதை அறிந்து 7.06க்கு கேட்டை, கேட் கீப்பர் மூடியுள்ளார். ரெயில் வருவதற்குள் கடந்து விடுகிறோம்' என இரு சக்கர வாகன ஓட்டிகள் அழுத்தம் கொடுத்ததால் கேட்டை திறந்துள்ளார். கேட் கீப்பர் செய்தது தவறுதான். அப்படி திறந்திருக்கக் கூடாது" என்று தெரிவித்திருந்தார்.

Read Entire Article