தண்ணீரில் நீந்தும் வாத்து போல கில் அதனை அற்புதமாக செய்கிறார் - இங்கிலாந்து முன்னாள் வீரர் பாராட்டு

4 hours ago 2

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பெற்றது. முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 2-வது இன்னிங்சில் சதமும் விளாசிய இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் சொந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களாலே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் இந்த தொடரின் 2 போட்டிகளிலே பதிலடி கொடுத்துள்ளார். தற்போது அவரை விமர்சித்த அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தண்ணீரில் நீந்தும் வாத்து போல சுப்மன் கில் கேப்டன்ஷிப் பொறுப்பில் அசத்துவதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் பட்சர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "உலக விளையாட்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பதை விட மிகவும் அழுத்தமான வேலை இல்லை அல்லவா? இங்கே விராட் கோலி மற்றும் சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் விளையாடிய இடத்தையும் அவர் (சுப்மன் கில்) நிரப்புகிறார் என்பதை குறிப்பிட வேண்டியதில்லை. அந்த வேலையில் அழுத்தம் மிகப்பெரியதாக உள்ளது.

ஆனால் அவர் அந்த வேலையை தண்ணீரில் நீந்தும் வாத்து போல எளிதாக எடுத்து கொண்டுள்ளார். அந்த வேலையில் மிகவும் கச்சிதமாக செயல்படும் அவர் அமைதியான மனோபாவத்தைக் கொண்டுள்ளார். தொழில்நுட்ப ரீதியாக அழகாக விளையாடும் அவருக்கு இத்தொடர் சிறப்பாக தொடங்கியுள்ளது. இத்தொடரின் முடிவில் அவர் பக்கத்தில் சில சாதனைகள் இருக்கலாம். அவர் ஏற்கனவே போதுமான அளவு தேர்ச்சி பெற்றுள்ளார். 

இது ஒரு நம்பமுடியாத தொடக்கமாகும். இங்கிலாந்து அணி அவருக்கு ஒரு பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சீக்கிரமாக அவுட்டாக்க வேண்டும். பின்னர் கீழ் வரிசையில் உள்ளவர்களை எளிதில் வீழ்த்தலாம்" என்று கூறினார். 

Read Entire Article