
கன்னியாகுமரி,
தென்னக ரெயில்வேயின் கீழ் இயங்கும் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பதற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய ரெயில்வேயில் சாதாரண ஏழை மக்கள் பெருமளவில் பயணம் செய்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக ரெயில்களில் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் இயக்கப்பட்டு வருகிறது. இது கடைசி நேரத்தில் பயணம் செய்ய திட்டமிடும் பயணிகளுக்கும் மிக பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்த பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவி வருவதால் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினையும் கொண்டு வந்தேன்.
இந்தியா முழுவதும் ரெயில்களில் மிக அதிகமான கூட்டம் நிலவி வருவதை கண்கூடாக கண்டு வருகிறோம். இத்தகைய நிலைமையில் சாதாரண மக்கள் அதிகம் நம்பும் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை ரெயில்வே நிர்வாகம் குறைத்திருப்பது கண்டனத்திற்குரியது. 4 முன்பதிவில்லா பெட்டிகள் இருந்த ரெயில்களில் இதன் எண்ணிக்கையை 2 ஆக ரெயில்வே நிர்வாகம் குறைத்துள்ளது.
முன்பதிவில்லா பெட்டிகளுக்கு பதிலாக குளிர்சாதன பெட்டிகளை இணைப்பது, ரெயில்வே நிர்வாகம் வருமானம் ஈட்டும் நோக்கில் உள்ளது என தெரிகிறது. வருமானத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் ஏழை மக்களுக்கு சேவை செய்யும் ஒரு துறையாக இந்திய ரெயில்வே துறை மாற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.