
மும்பை,
இன்றைய இளம் வயதினர் கைகளில் பெரும்பாலும் வைத்திருப்பது செல்போன் மட்டுமே. கையில் பணம் இருக்கிறதோ இல்லையோ. செல்போன் நிச்சயம் இருக்கும். அதனை வைத்து தாங்கள் செல்லும் இடங்கள், செய்யும் சாகசங்கள் போன்றவற்றை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தங்களுக்கு பிடித்தவர்களிடம் காட்டி மகிழ்ந்து வந்தனர்.
நாளடைவில் இந்த மோகம் சமூக வலைதளத்தில் வெளியிட வைக்கும் அளவிற்கு சென்றது. இதில் கிடைத்த வரவேற்பு இன்று ஆபத்தான வீடியோக்களை எடுத்து பலரும் சமூக வலைதளத்தில் பதிவேற்றி வருகின்றனர். இதில் சில உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.
இந்த நிலையில், மராட்டிய மாநிலம் நவிமும்பையின் பெலாப்பூரைச் சேர்ந்த ஆரவ் ஸ்ரீவஸ்தவா வயது 16. இவர் கடந்த 6-ம் தேதி தனது நண்பர்களுடன் நேருல் ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் பெட்டியின் மேல் ஏறி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதாமக சிறுவனின் கைகள் மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் பட்டது.
இதில் ஆரவ் ஸ்ரீவஸ்தவா மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட நிலையில், தலை மற்றும் உடலின் மற்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது நண்பர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து ஆரவ் ஸ்ரீவஸ்தவாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவரது உடல்நிலை மோசமாகியதால், ஐரோலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தொடர்ந்து 6 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் ஆரவ் ஸ்ரீவஸ்தவா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.