
லண்டன்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2-வது இன்னிங்சில் 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது.
இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் அடித்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்த சூழலில் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து அணியின் 2-வது இன்னிங்சின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்து வீச்சில், பென் டக்கெட் பும்ராவிடம் கேட்ச் ஆனார். விக்கெட்டை கைப்பற்றியதும் முகமது சிராஜ், டக்கெட்டின் முகத்துக்கு நேராக ஆக்ரோஷமாக கத்தி வெறித்தனமாக கொண்டாடினார். அத்துடன் அவரது தோள்பட்டை மீது லேசாக இடித்தார். ஆனால் டக்கெட் எதுவும் பேசாமல் அதிருப்தியுடன் வெளியேறினார்.
உடல் ரீதியாக உரசுவது வீரர்களின் நடத்தை விதிமீறல் என்பதால் முகமது சிராஜுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் களத்தில் மோசமான வார்த்தையை பயன்படுத்திய சுப்மன் கில்லுக்கு அபராதம் விதிக்காமல் முகமது சிராஜுக்கு மட்டும் விதித்திருப்பது அபத்தமானது என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிராட் தனது எக்ஸ் பக்கத்தில், "இது அபத்தமானது. சிராஜ் ஆக்ரோஷமாக கொண்டாடியதால் 15 சதவீதம் அபராதம் விதித்துள்ளார்கள். ஆனால் போட்டியின்போது நேரலையில் மோசமான வார்த்தை பேசிய கில்லுக்கு எந்த அபராதமும் இல்லை. இது அபத்தமாக உள்ளது. ஒன்று அபராதமே விதித்திருக்கக் கூடாது, இல்லையென்றால் இருவருக்கும் விதிக்க வேண்டும். நிலைத்தன்மை ரொம்ப முக்கியம்" என்று பதிவிட்டுள்ளார்.