"ரெயில் கட்டண உயர்வை திரும்பப் பெறுக" - முத்தரசன்

1 week ago 4

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தலைவர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது-

பாஜக மத்திய அரசு அறிவித்த ரெயில் கட்டண உயர்வு ஏழை மக்களை, குறிப்பாக அடித்தட்டு மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துக் கூறி, அதனை திரும்பப் பெற வேண்டும் என, எதிர்கட்சிகள், ரெயில் பயணிகள் சேவை அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசு எந்தவித மாறுதலும் இல்லாமல் இன்று முதல் 01.07.2025 ரெயில் கட்டண உயர்வை அமலாக்கியுள்ளது.

கட்டண உயர்வை ரூபாய் கணக்கில் கூறாமல் பைசா கணக்கில் கூறியிருப்பது பொதுமக்களை ஏமாற்றும் வஞ்சகமாகும். நாள்தோறும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் என்ற முறையில், ஆண்டுக்கு 400 கோடி பேர் பயணிக்கும் ரெயில் பயணம் எத்தனை கோடி கிலோ மீட்டராக இருக்கும் என்பதை கணக்கிட முடியாமல் மறைக்கும் செயலாகும். இது தவிர முன்பதிவு முறையில் தட்கால், பிரிமியம் தட்கால், அதிவிரைவு வண்டி, சிறப்புக் கட்டண சேவை என பல்வேறு வகைகளில் ரயில் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

கிலோ மீட்டருக்கு 4 பைசா வரை கட்டண உயர்வு என்பதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கட்டண சுமையை பயணிகள் தலையில் சுமத்தியிருக்கும் மோடியின் ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், அறிவிக்கப்பட்டு, அமலாக்கத் தொடங்கியுள்ள ரெயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article