ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்ட மகளிர் ஆணையம்

3 months ago 10

புதுடெல்லி,

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது பெண். இவரும் இவரது கணவரும் தையல் கலைஞர்கள். திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்வதால் அங்கேயே வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், அந்தப் பெண் 2-வது முறையாக கர்ப்பமடைந்ததால் மருத்துவ பரிசோதனைக்காக தன் தாயார் வசிக்கும் சித்தூர் மாவட்டத்துக்கு செல்ல கோவையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பொது வகுப்பு பெட்டியில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) நள்ளிரவு பயணம் செய்தார்.

இந்த ரெயில் நேற்று (பிப்.7) அதிகாலை 12.10 மணியளவில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் - கே.வி.குப்பம் இடையே சென்று கொண்டிருந்தபோது அப்பெண் ரெயிலில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த வந்தார்.

அப்போது, கழிப்பறை அருகே அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணை வழிமறித்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதை எதிர்பாராத இளம் பெண் கூச்சலிட சக பயணிகள் அங்கு வந்தனர்.அந்த நேரத்தில் அந்த இளைஞர் ஓடும் ரெயலில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டு அவர் வேறு பெட்டிக்கு மாறி தப்பினார்.

பெண் கீழே விழுந்ததை பார்த்த சக பயணிகள் உடனடியாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கே ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்து கிடந்த கர்ப்பிணியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரின் கை மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் வெளியானதை தொடர்ந்து, ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ருவந்திகா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஓடும் ரெயிலில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டு அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளியது யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதில், அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபர் வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் (30) என்பதும், இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் செல்போன் பறிப்பு வழக்கிலும், கடந்த 2024-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டு 2 முறை குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்கப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருப்பதும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து, ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹேமராஜை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் இளம்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்று இருக்கிறது. நடந்த சம்பவத்தை கண்டிப்பதாக தெரிவித்துள்ள மகளிர் ஆணையம், மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு கவலைகளை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யவும், பாரதிய நியாய சட்டவிதிகளை அதற்கு பயன்படுத்தவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்தி உள்ளது.

மேலும், சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை நகல் உள்ளிட்ட விரிவான அறிக்கையை 3 நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்தில் சமர்ப்பிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு உள்ளது.

இதனிடையே கோவை-திருப்பதி விரைவு ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணி தற்போது பெண் நலமாக இருக்கிறார் என்றும், உடல்நிலை சீராக உள்ளது என்றும், காயமடைந்த கர்ப்பிணிக்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும்,சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு 12 மணி நேரத்திற்குள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read Entire Article