புதுடெல்லி: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிந்தது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 18 பைசாக்கள் சரிந்து முதல்முறையாக நேற்று முன்தினம் 86 ஐ தொட்டது.ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 86.04 என உள்ளது. அமெரிக்க டாலர் வலுவாக இருப்பதும், இந்திய பங்கு சந்தைகளில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறுவதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதற்கு காரணம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில்,’டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவை எட்டியுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக ஒரு டாலரின் மதிப்பு 86.4 ரூபாயாக மாறியுள்ளது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது டாலரின் மதிப்பு 58-59 ரூபாயாக இருந்த போது ரூபாயின் மதிப்பை ஒன்றிய அரசின் கவுரவத்துடன் இணைத்து மோடி பேசினார்.தனக்கு எல்லாம் தெரியும். எந்த ஒரு நாட்டின் கரன்சியும் இப்படி விழ முடியாது என்று மோடி பேசினார். இன்று அவரே பிரதமராக உள்ளார். ரூபாயின் மதிப்பு சரிவில் அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து நாட்டு மக்களுக்கு அவர் பதிலளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ரூபாய் மதிப்பு சரிவு ஒரு டாலர் ரூ.86.40: மோடி பதிலளிக்க பிரியங்கா கோரிக்கை appeared first on Dinakaran.