சேலம், ஏப்.12: சேலம் மாவட்டத்தில் ரூ.7.43 கோடி மதிப்பிலான 33 பள்ளி வகுப்பறை மற்றும் நூலக கட்டிடங்களை, காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், எண்ணும், எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி, பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் போன்றவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்திட்டங்களின் கீழ் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். மாணவர்களுக்கு சிறப்பான கற்றல் அனுபவங்களை வழங்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், புதிததாக கட்டிடங்கள் கட்டுதல், உயர்த்தப்பட்ட மேற்கூரை, காற்றோட்டமிக்க ஜன்னல் வசதிகள், சுவர் ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் ரூ.32.64 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 199 வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதேபோல், ரூ.84.76 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 326 நூலக கட்டிடங்களையும் முதல்வர் நேற்று திறந்து வைத்தார். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, ரூ.7.43 கோடி மதிப்பிலான 33 பள்ளி வகுப்பறை மற்றும் நூலக கட்டிடங்கள், காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து பனமரத்துப்பட்டி ஒன்றியம், பள்ளித்தெருப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து, நேற்று திறந்துவைக்கப்பட்ட சூரமங்கலம் முழுநேர நூலகத்தை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிகளில், ஆர்டிஓ அபிநயா, மாவட்ட நூலக அலுவலர் விஜயகுமார், தாசில்தார் பார்த்தசாரதி, பனமரத்துப்பட்டி பிடிஓ கார்த்திகேயன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 4 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கென அதிகளவிலான நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக, சேலம் மாவட்டத்தில் ரூ.5.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 நூலகக் கட்டிடங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 6 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகளை திறந்து வைத்துள்ளார். இதில், ஊரக வளர்ச்சி துறை சார்பில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், கெங்கவல்லி ஒன்றியம், உலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டிலும், பனமரத்துப்பட்டி ஒன்றியம், பள்ளித்தெருப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.28.35 லட்சம் மதிப்பீட்டிலும் தலா 2 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இதேபோல், வாழப்பாடி ஒன்றியம், துக்கியம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டிலும், புழுதிக்குட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டிலும், முத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டிலும், கோலாத்துக்கோம்பை புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள தலா 2 புதிய வகுப்பறைகள் என மொத்தம் 6 பள்ளிகளில் ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பொது நூலக இயக்ககத்தின் சார்பில் ரூ.5.46 கோடி மதிப்பீட்டில் சூரமங்கலம், இளம்பிள்ளை, ஏத்தாப்பூர், தேவூர், வாழப்பாடி, முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 21 நூலகக் கட்டடங்களும் முதல்வரால் திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ரூ.7.43 கோடியில் 33 வகுப்பறை நூலக கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.