சென்னை, ஜன.17: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்து மீண்டும் ஒரு பவுன் தங்கம் ரூ.59 ஆயிரத்தை கடந்ததால் நகை வாங்குவோர் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளியின்போது (அக்டோபர் மாதம்) அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது.
கடந்த டிச. 25ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,800-க்கு விற்பனையானது. இந்நிலையில், மீண்டும் படிப்படியாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. தை மாதம் பிறந்துவிட்டாலே சுப முகூர்த்தங்களுக்கு குறைவிருக்காது.
இந்த நிலையில், தை மாதம் 3ம்தேதியான நேற்று காணும் பொங்கலன்று, தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று காலை வணிகம் தொடங்கியதும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.59,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.58,720க்கு விற்பனையாகி வந்த நிலையில், நேற்று ரூ.59 ஆயிரத்தை எட்டிவிட்டது.
ஜனவரி முதல் வாரத்தில் ரூ.57 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து நேற்று ரூ.59 ஆயிரத்தைத் தொட்டிருக்கிறது. அதேபோன்று, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.50 உயர்ந்து ரூ.7,390க்கு விற்பனையாகி வருகிறது. அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நகை வாங்கும் சாமானியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 2025ம் ஆண்டு நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஆண்டாக உள்ளது. அந்த வகையில் மீண்டும் ரூ.59ஆயிரத்தை தங்கம் விலை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ரூ.59 ஆயிரத்தை கடந்தது; தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு: நகை வாங்குவோர் கலக்கம் appeared first on Dinakaran.