ரூ.58 கோடி மதிப்பீட்டில் கடப்பாக்கம் ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா: பணிகள் தொடங்கியது

1 month ago 4


மாதவரம்: சென்னை மாநகர பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பிறகு, மாநகர பகுதியில் ஆக்கிரமிப்பில், பராமரிப்பின்றி இருந்த ஏரிகள், குளங்கள் மீட்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காக்களாக மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக பராமரிப்பின்றி கழிவுகள் நிறைந்து காணப்பட்ட ஏரிகள் அனைத்தையும் மழைநீர் சேகரிக்கும் வகையில் தூர்வாரும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

அதன்படி, 100க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஏரிகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்படும் ஏரிகளை அழகுபடுத்தி அதை பூங்காவாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் பராமரிப்பின்றி கிடந்த ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தற்போது மக்கள் ரசிக்கும் இடங்களாக மாற்றப்பட்டு வருகிறது. சென்ைன மாநகராட்சியின் இந்த முயற்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது, சென்னையில் உள்ள நீர்நிலைகளை முறையாக பராமரித்து வறட்சியின் பிடியில் இருந்து மக்களை காக்கவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக மாற்றவும் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த பட்டியலில் தற்போது வட சென்னையில் உள்ள மணலி மண்டலம், 16வது வார்டில் இடம்பெற்றுள்ள 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடப்பாக்கம் ஏரி கவனம் பெற்றிருக்கிறது. இதனை முழுமையான சுற்று சூழல் பூங்காவாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது ஏரியில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. சுமார் 3 மீட்டர் ஆழத்துக்கு தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் ஏரியின் நீர் கொள்திறன் இரட்டிப்பாகும். அதாவது 1.9 மில்லியன் கன மீட்டராக கொள்திறன் உயர்த்தப்பட உள்ளது. தூர்வாரும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், இப்பூங்காவில் பொதுமக்களை கவரும் வகையில் நடைபாதை, வண்ணத்துப்பூச்சி பூங்கா, இரு பறவைகள் தீவுகள், செயற்கை நீரூற்று, மீன்பிடி இடங்கள், பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க சாய்வு இருக்கை வசதி மற்றும் நடைபாதை வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. கடப்பாக்கம் ஏரியை ரூ.58 கோடியில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் பணி தொடங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், குறிப்பாக குழந்தைகளுக்கான பல்வேறு வசதிகள் மற்றும் விளையாட்டுகளுடன் கூடிய பரபரப்பான சுற்றுச்சூழல் பூங்காவாக விரைவில் மாற உள்ளது. 149 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏரியின் தற்போதைய அளவு ஆக்கிரமிப்புகள் காரணமாக 134 ஏக்கராக சுருங்கியுள்ளது. இத்தகைய சூழலில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் மீண்டும் பரந்த பெரும் பரப்பை இந்த ஏரி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சென்னை மாநகரிலேயே மிகப்பெரிய சூழலியல் பூங்காவாக கடப்பாக்கம் ஏரி மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* தூ ர்வாரும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், இப்பூங்காவில் பொதுமக்களை கவரும் வகையில் நடைபாதை, வண்ணத்துப்பூச்சி பூங்கா, இரு பறவைகள் தீவுகள், செயற்கை நீரூற்று, மீன்பிடி இடங்கள், பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க சாய்வு இருக்கை வசதி மற்றும் நடைபாதை வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.

* சுற்றுலா தலமாக மாறும் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ஏற்கனவே மணலி ஏரியை சுற்று சூழல் பூங்காவாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. அதன்பிறகு குப்பை கொட்டுவது தடுக்கப்படும். சுற்றிலும் வேலிகள் அமைக்கப்படும். கடப்பாக்கம் ஏரியில் பல்லுயிர் கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் முடிவடைந்து விட்டன. நீர்நிலையின் அடித்தளம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, ​​ஏரி மாசுபடுவதாலும், சுற்றுச்சுவர் இல்லாததாலும், முறைகேடாக குப்பை கொட்டப்படுகிறது.

கொசஸ்தலையாறு படுகையில் வெள்ளத் தணிப்பை மேம்படுத்தும் அதே வேளையில், மறுசீரமைப்பு நடவடிக்கைகளானது இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்க்கும். இங்கிருந்து வரும் உபரி நீர், வாய்க்கால்களில் ஆற்றுக்கு கொண்டு செல்லப்படும். விவசாய பயன்பாட்டிற்கான நீரை வெளியேற்றும் வகையில் ஒரு மதகு அமைக்கப்படும். சென்னை மாநகரின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது சுற்றுலா இடங்களுக்கு குறைவான இடங்களைக் கொண்ட வடசென்னையின் ஓய்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த சுற்றுச்சூழல் பூங்கா அமையும்.

சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் வாகன நிறுத்துமிடமும் திட்டமிடப்பட்டுள்ளது, வாகன நிறுத்தம் மற்றும் ஓய்வு வசதிகள் மூலம் வருவாய் கிடைக்கும் என மாநகராட்சி எதிர்பார்க்கிறது. இந்த ஏரியில் மறுசீரமைப்பு, நடைபாதை அமைத்தல், அழகுபடுத்தும் பணிகள், கரையோரப் பகுதிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பணிகளும் அடுத்த ஓராண்டில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ரூ.58 கோடி மதிப்பீட்டில் கடப்பாக்கம் ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா: பணிகள் தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article