சென்னை: அதிமுக கட்சியில் போலி உறுப்பினர்களை சேர்க்க கட்டாயப்படுத்தப்படுகிறது என்று கட்சி தலைமை மீது குற்றச்சாட்டு கூறிய மதுரை வட்ட செயலாளரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். மதுரையை சேர்ந்த, அதிமுக வட்ட செயலாளர் எம்.உதயகுமார் கடந்த 2ம் தேதி அதிமுக தலைமை மீது ஒரு குற்றச்சாட்டை தெரிவித்து பேட்டி அளித்தார். அப்போது, “ஒவ்வொரு வட்ட செயலாளர்களிடமும் 5 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்கும்படி அதிமுக தலைமை அழுத்தம் கொடுத்து வருகிறது.
அதிமுகவில் 3 கோடி உறுப்பினர்களை சேர்க்க கட்சி தலைமை இலக்கு வைத்துள்ளது. அதன்படி, போலியாக அதிமுக உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம். 2100 பேரும் வெவ்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அடங்குவர். இதில் 700 உறுப்பினர் அட்டைகளை உரியவர்களிடம் கொடுத்து விட்டேன். மீதியை கொடுக்க முடியாமல் வைத்திருக்கிறேன்” என்றார். கட்சி தலைமை மீது அதிமுக வட்ட செயலாளர் ஒருவரே பரபரப்பான குற்றச்சாட்டை கூறி இருந்தார்.
இந்நிலையில், அதிமுக கட்சி நிர்வாகிகள் போலியான உறுப்பினர்களை சேர்க்க சொல்லி வலியுறுத்தியதாக பேட்டி அளித்த உதயகுமாரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவுக்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த எம்.உதயகுமார் (15 கிழக்கு வட்ட அதிமுக செயலாளர், பிள்ளையார் கோயில் தெரு, ஜவஹர்புரம், மதுரை வடக்கு 2ம் பகுதி) இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கட்சியில் போலி உறுப்பினர்கள் சேர்க்க கட்டாயப்படுத்துவதாக அதிமுக தலைமை மீது குற்றச்சாட்டு கூறிய மதுரை வட்ட செயலாளர் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.