திருவள்ளூர்: பட்டரைப் பெரும்புதூரில் ரூ6 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்துள்ளனர். திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்டரைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் அறிவுறுத்தலின்பேரில் ேநற்றுமுன்தினம் தாலுகா சப்- இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருத்தணியிலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப் என 800 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இவர்கள் திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இதனை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த மினி வேனையும், 800 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த அக்பர் அகமது (37), சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் (35) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ6 லட்சம் இருக்கும் என காவல்துறை சார்பில் தெரிவித்தனர்.
The post பட்டரைப்பெரும்புதூரில் ரூ6 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது appeared first on Dinakaran.