ரூ.500, ரூ.1000 என வாக்குகளை விற்பவர்கள் விலங்குகளாக பிறப்பார்கள்: பாஜ எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

5 hours ago 2

இந்தூர்: ரூ.500, ரூ.1000 என வாக்குகளை விற்பவர்கள் விலங்குகளாக பிறப்பார்கள் என்று பாஜ எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மோவ் தொகுதியில் பாஜ சார்பில் எம்எல்ஏவாக இருந்து வருபவர் உஷா தாகூர். முன்னாள் அமைச்சரான இவர், தனது தொகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பாஜ அரசின் ஏராளமான திட்டங்களால் பயனாளிகளுக்கு ஆயிரக்கணக்கான பணம் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அப்படியிருந்தும்கூட, தங்கள் வாக்குகளை ரூ.1,000, ரூ.500 என விற்றால், அது மனித குலத்துக்கு அவமானம்.

அப்படி பணம், சேலை, மது போன்றவற்றை வாங்கி கொண்டு வாக்களிப்பவர்கள், அடுத்த ஜென்மத்தில் நிச்சயமாக ஒட்டகம், செம்மறி, வெள்ளாடு, நாய், பூனையாகதான் பிறப்பார்கள் என்பதை உங்கள் டைரியில் குறித்து வைத்து கொள்ளுங்கள். ஜனநாயகத்தை விற்பவர்கள் இப்படித்தான் பிறப்பார்கள். நீங்கள் வாக்களிப்பது ரகசியமானது என்றாலும், கடவுள் அதை பார்த்து கொண்டுதான் இருக்கிறார். நான் கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கிறேன். என்னை நம்புங்கள்’ என்றார். இந்த பேச்சு அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

The post ரூ.500, ரூ.1000 என வாக்குகளை விற்பவர்கள் விலங்குகளாக பிறப்பார்கள்: பாஜ எம்எல்ஏ சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article