
பெங்களூரு,
கர்நாடகாவின் ஹப்பள்ளி மாவட்டத்தில் நேற்று மாலை சேத்தன் ரக்காசகி (வயது 14) மற்றும் சாய் (வயது 12) என இரு சிறுவர்கள் அவர்களுடைய வீட்டின் அருகே ஒன்றாக விளையாடி கொண்டிருந்தனர். இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். சேத்தன் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். சாய் 6-ம் வகுப்பு மாணவன்.
அப்போது, ரூ.5 மதிப்புள்ள நொறுக்கு தீனியை பகிர்ந்து கொள்வதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், சாய் கத்தியால் சேத்தனை தாக்கியுள்ளான். இதில், பலத்த காயமடைந்த சேத்தனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அதில் பலனின்றி சேத்தன் உயிரிழந்து விட்டான்.
இந்த சம்பவம் பற்றி ஹப்பள்ளியின் காவல் ஆணையாளர் சசி குமார் வேதனை தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் பற்றி அவர் குறிப்பிடும்போது, 6-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு கத்தியால் குத்த வேண்டும் என்ற மனநிலை வளர்ந்துள்ளது துரதிர்ஷ்டம் வாய்ந்தது.
தொலைக்காட்சி அல்லது மொபைல் போன்களில் அவர்கள் பார்க்கும் வன்முறை காட்சியின் விளைவாக மற்றும் குடும்பம், சமூகம் ஆகியவற்றின் விளைவாக இது ஏற்பட்டிருக்க கூடும். அதனால் ஒவ்வொருவரும் விழிப்புணர்வை பெற வேண்டும். இளம் குழந்தை, குற்றவாளியாக குறிப்பிடப்படுகிறான் என அவர் வருத்தத்துடன் கூறினார். இந்த வழக்கு பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.