சென்னை: ரூ.5 கோடி மதிப்புள்ள வீட்டுடன் கூடிய நிலத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் முலம் அபகரித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாராசந்த் தனக்கு சொந்தமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 1 கிரவுண்ட் 1,262 சதுரடிகள் கொண்ட நிலம் மற்றும் அதனுள் கட்டியுள்ள வீட்டினை, தனது தாயாரைப் போல் ஆள்மாறாட்டம் செய்து போலியான பொது அதிகாரம் தயாரித்து சொத்தை விற்பனை செய்தும், பின் வங்கியில் அடமானம் வைத்து ரூ.3,03,28,000/- கடன் பெற்றும் சிலர் ஏமாற்றி சொத்தில் வில்லங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சென்னை காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு உத்ததரவிட்டதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு, நிலமோசடி புலனாய்வு பிரிவில் (LFIW) வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் A.ராதிகா அறிவுரையின்படி, துணை ஆணையாளர் ஆலோசனையின்படி, நிலமோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் மேற்பார்வையில், நிலமோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி, பெ/வ.59 என்பவரை 26.04.2024 அன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும், நிலமோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, இவ்வழக்கில் தலைமறைவு குற்றவாளி ஸ்ரீதர், வ/60, த/பெ.சுப்ரமணியன், எல்லோரா அபார்ட்மென்ட், பாரதீஸ்வரர் காலனி, கோடம்பாக்கம், சென்னை என்பவரை கைது செய்து விசாரணைக்குப் பின்னர் கடந்த 1ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உத்தரவுப்படி, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் எதிரி ஸ்ரீதர் மீது ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவில் நில மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதன் தொடர்ச்சியாக மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதரின் மகன் பிரசாந்த், வ/31, த/பெ.ஸ்ரீதர், கோடம்பாக்கம், சென்னை என்பவரை நேற்று காவல் குழுவினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உத்தரவுப்படி, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் விசாரணையில் எதிரி பிரசாந்த் மீது ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவில் நில மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சென்னை மாநகரில், சொத்துக்கள் வாங்கும் நபர்கள் விற்பனை செய்யப்படும் நிலத்தின் ஆவணங்களை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மற்றும் வருவாய் துறை அலுவலகங்களில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து சொத்துக்கள் வாங்குமாறு சென்னை காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post ரூ.5 கோடி மதிப்புள்ள வீட்டுடன் கூடிய நிலத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் முலம் அபகரித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.