புதுடெல்லி: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாத்தியமற்ற சாதனையாக, ஐசிசி ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (36), தொடர்ந்து 1,151 நாட்களாக முதலிடத்தில் நீடிக்கிறார். ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர்களுக்கான, சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், ரவீந்திர ஜடேஜா, 400 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். இந்த பட்டியலில், முதலிடத்தில் ஜடேஜாவின் பெயரே, தொடர்ந்து 1151 நாட்களாக நீடிப்பது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான சாதனையாக பார்க்கப்படுகிறது.
பட்டியலில், வங்கதேசத்தின் மெஹிடி ஹசன் மிராஸ், 327 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், தென் ஆப்ரிக்காவின் மார்கோ யான்சன், 294 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 271 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன், 253 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளனர். ஜடேஜா, இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராகவும், எப்போதும் நம்பத்தகுந்த கீழ் வரிசை பேட்ஸ்மேனாகவும் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறார். தவிர, பீல்டிங்கில் ஜடேஜாவின் திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான தருணத்தில் தவித்துக் கொண்டிருந்தால், அங்கு ஆபத்பாந்தவனாக ஜடேஜா அரை சதம் கடந்து அணியை காப்பாற்றிய தருணங்கள் பல. அதே போல், அவரது அற்புத பந்து வீச்சு திறனால், பல முறை 5 விக்கெட்டுகளை சாய்த்து எதிரணியை நிலைகுலையச் செய்துள்ளார்.
The post ஐசிசி தரவரிசையில் முதலிடம்: அடிச்சிக்க ஆளே இல்லாத ஆல் ரவுண்டர் ஜடஜோ appeared first on Dinakaran.